மொயீன் அலி ஹாட்ரிக்; இங்கிலாந்து அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இங்கிலாந்து.
வெற்றிக் களிப்பில் இங்கிலாந்து அணியினர்.
வெற்றிக் களிப்பில் இங்கிலாந்து அணியினர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இங்கிலாந்து.
அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 103.2 ஓவர்களில் 353 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 58.4 ஓவர்களில் 175 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 79.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 492 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 72, டெம்பா பெளமா 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
டீன் எல்கர் சதம்: கடைசி நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டெம்பா பெளமா 32 ரன்களில் வீழ்ந்தார். இதையடுத்து களம்புகுந்த வெர்னான் பிலாண்டர் டக் அவுட்டாக, கிறிஸ் மோரீஸ் களம்புகுந்தார்.
இதனிடையே டீன் எல்கர் 149 பந்துகளில் சதமடித்தார். அந்த அணி 205 ரன்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் மோரீஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி வீசிய 76-ஆவது ஓவரின் 5-ஆவது பந்தில் டீன் எல்கர் (228 பந்துகளில் 136 ரன்கள்) ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் காகிசோ ரபாடா (0) ஆட்டமிழந்தார். இதன்பிறகு 78-ஆவது ஓவரை வீசிய மொயீன் அலி, முதல் பந்தில் மோர்கலை (0) வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்காவின் 2-ஆவது இன்னிங்ஸ் 77.1 ஓவர்களில் 252 ரன்களோடு முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும், ஜோன்ஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் வரும் வெள்ளிக்கிழமை ஓல்டு டிராபோர்டில் தொடங்குகிறது.
79 ஆண்டுகளுக்குப் பிறகு...
இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் கடந்த 79 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மொயீன்அலி.
இதுதவிர டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்தின் 4-ஆவது சுழற்பந்து வீச்சாளர், ஒட்டுமொத்தத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 13-ஆவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனைகளும் அவர் வசமாகியுள்ளது. ஓவல் மைதானத்தில் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் மொயின் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com