3-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்: 'ஒயிட் வாஷ்' முனைப்பில் இந்தியா

இந்தியா-இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் சனிக்கிழமை தொடங்குகிறது.
3-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்: 'ஒயிட் வாஷ்' முனைப்பில் இந்தியா

இந்தியா-இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் சனிக்கிழமை தொடங்குகிறது.
முதல் இரு போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, 3-ஆவது டெஸ்டிலும் வென்று இலங்கையை 'ஒயிட் வாஷ்' ஆக்கும் முனைப்பில் உள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கையை வீழ்த்தும்பட்சத்தில் வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் எதிரணியை 'ஒயிட் வாஷ்' ஆக்கிய முதல் இந்திய அணி என்ற பெருமை கோலி படைக்கு கிடைக்கும். 85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எந்த அணியையும் 'ஒயிட் வாஷ்' ஆக்கியதில்லை.
அதேநேரத்தில் இலங்கை அணி சொந்த மண்ணில் 'ஒயிட் வாஷ்' தோல்வியை தவிர்க்கப் போராடும். அந்த அணி தற்போது பலவீனமாக இருப்பதால், இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. எனவே அந்த அணி இந்தப் போட்டியை டிரா செய்ய முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிரட்டும் புஜாரா: முதல் இரு போட்டிகளிலும் அபார வெற்றி கண்டிருக்கும் இந்திய அணி, இந்தப் போட்டியிலும் மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் கோலி, அஜிங்க்ய ரஹானே என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
கடந்த இரு போட்டிகளிலும் சதமடித்த புஜாரா, இந்தப் போட்டியிலும் பெரிய அளவில் ரன் குவிப்பார் என நம்பலாம். இதுதவிர கோலி உள்ளிட்ட மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். பின்வரிசையில் அஸ்வின், ரித்திமான் சாஹா கூட்டணி பலம் சேர்க்கிறது.
எப்போதுமே ஈரப்பதமாக காணப்படும் பல்லகெலே மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமேஷ், முகமது சமி ஆகியோருடன் 3-ஆவது சுழற்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இடம்பெறலாம். புவனேஸ்வர் குமார் இடம்பெறும்பட்சத்தில் ஹார்திக் பாண்டியா நீக்கப்படலாம். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜடேஜாவுக்கு 3-ஆவது டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அஸ்வினுடன் 2-ஆவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுமாறும் இலங்கை: இலங்கை அணியில் திமுத் கருணாரத்னே, உபுல் தரங்கா, குஷல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல், மேத்யூஸ், டிக்வெல்லா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் இவர்களில் திமுத் கருணாரத்னே மட்டுமே தொடர்ச்சியாக ரன் குவித்து வருகிறார். அதற்கடுத்தபடியாக குஷல் மென்டிஸ், டிக்வெல்லா ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி வருகிறார்கள். எஞ்சிய வீரர்கள் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள். உபுல் தரங்கா ஃபார்மை இழந்து தவித்து வருகிறார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நுவான் பிரதீப் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாதது பெரும் பின்னடைவாகும். அவருக்குப் பதிலாக துஷ்மந்தா இடம்பெறுவார் என தெரிகிறது. எனவே வேகப்பந்து வீச்சில் தில்ருவான் பெரேரா, விஸ்வா பெர்னாண்டோ ஆகியோரையே நம்பியுள்ளது இலங்கை.
மூத்த சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. எனவே சுழற்பந்து வீச்சில் டி சில்வாவையே நம்பியுள்ளது இலங்கை.
இந்தியா (உத்தேச லெவன்): ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, அஸ்வின், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா/புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், முகமது சமி.
இலங்கை (உத்தேச லெவன்):
உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல் (கேப்டன்), ஏஞ்செலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனஞ்ஜெய டி சில்வா, தில்ருவான் பெரேரா, துஷ்மந்தா சமீரா/லக்ஷன் சன்டாகன், விஸ்வா பெர்னாண்டோ, லஹிரு குமாரா.

9-ஆவது வெற்றியை நோக்கி இந்தியா...
இலங்கை மண்ணில் இந்தியா இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இலங்கை மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற வெளிநாட்டு அணிகளின் வரிசையில் பாகிஸ்தானுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெல்லும்பட்சத்தில் அது 9-ஆவது வெற்றியாக அமையும். இதன்மூலம் பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளப்படும்.

மிரட்டும் மழை
பல்லகெலேவில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இந்த மழை அடுத்த சில தினங்களுக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

போட்டி நேரம்: காலை 10
நேரடி ஒளிபரப்பு:
சோனி சிக்ஸ், சோனி டென் 3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com