பாண்டியா சதம்; இந்தியா 487 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்தது.
சதமடித்த மகிழ்ச்சியில் பாண்டியா.
சதமடித்த மகிழ்ச்சியில் பாண்டியா.

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்தது. ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 96 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் குவித்தார்.

பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணி 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து பாலோ-ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை இன்னும் 333 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. எனவே இந்தப் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவன் 119, கே.எல்.ராகுல் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்திருந்தது. ரித்திமான் சாஹா 13, ஹார்திக் பாண்டியா 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் சாஹா 16 ரன்களில் நடையைக் கட்ட, பாண்டியாவுடன் இணைந்தார் குல்தீப் யாதவ். இந்த ஜோடி நிதானமாக ஆட, 110-ஆவது ஓவரில் 400 ரன்களை எட்டியது இந்தியா. அடுத்த ஓவரில் குல்தீப் யாதவ் ஆட்டமிழந்தார். அவர் 73 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார். குல்தீப்-பாண்டியா ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது.
பாண்டியா சதம்: இதையடுத்து முகமது சமி களமிறங்க, மறுமுனையில் அதிரடியில் இறங்கிய பாண்டியா, 61 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனிடையே சமி 8 ரன்களில் வெளியேற, இந்தியா 114.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து களம்புகுந்த உமேஷ் யாதவ், ஒருபுறம் தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டை காப்பாற்ற, மறுமுனையில் பாண்டியா ருத்ரதாண்டவம் ஆடினார். அதன் உச்சகட்டமாக புஷ்பகுமாரா வீசிய 116-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் கிடைத்தன. தொடர்ந்து வேகம் காட்டிய பாண்டியா 86 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது.
இந்தியா 487: தொடர்ந்து சிறப்பாக ஆடிய பாண்டியா 96 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, இந்தியா 122.3 ஓவர்களில் 487 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உமேஷ் யாதவ் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு பாண்டியா-உமேஷ் யாதவ் ஜோடி 66 ரன்கள் சேர்த்தது.
இலங்கைத் தரப்பில் சன்டாகன் 5 விக்கெட்டுகளையும், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலங்கை 135-க்கு ஆல் அவுட்: பின்னர் ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களான உபுல் தரங்கா (5), கருணாரத்னே (4) ஆகியோரை முகமது சமி வெளியேற்ற, அந்த அணியின் சரிவு ஆரம்பமானது. பின்னர் வந்த குஷல் மென்டிஸ் 18 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாக, மேத்யூஸ் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே பாண்டியா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதனால் 9.3 ஓவர்களில் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை.
இதையடுத்து கேப்டன் தினேஷ் சன்டிமலுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா. இலங்கையை சரிவிலிருந்து மீட்க போராடிய இந்த ஜோடி, அந்த அணி 20.3 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. டிக்வெல்லா 29 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த தில்ருவான் பெரேராவை ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளியேற்றினார் குல்தீப் யாதவ். மறுமுனையில் தனிநபராகப் போராடிய தினேஷ் சன்டிமல் 48 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு புஷ்பகுமாரா, சன்டாகன் ஆகியோர் தலா 10 ரன்கள் சேர்த்து வெளியேற, கடைசி விக்கெட்டான பெர்னாண்டோ டக் அவுட்டானார். இதனால் 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்கு சுருண்டது இலங்கை. அந்த அணி கடைசி 34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது சமி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலங்கை 19/1: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 352 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, இலங்கை அணிக்கு "பாலோ-ஆன்' கொடுத்தது. இதையடுத்து 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணியில் உபுல் தரங்கா 7 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை இன்னும் 333 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இந்தப் போட்டியிலும் இலங்கை இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

துளிகள்...


5

முதல்தர கிரிக்கெட்டின் முதல் சதத்தை டெஸ்ட் போட்டியின் மூலம் அடித்த 5-ஆவது இந்தியர் பாண்டியா ஆவார். விஜய் மஞ்சரேக்கர், கபில்தேவ், அஜய் ரத்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மற்ற இந்தியர்கள் ஆவர்.

3

டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 3 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய 3-ஆவது இந்தியர் என்ற பெருமையை பாண்டியா பெற்றுள்ளார். கபில்தேவ் தோனி ஆகியோர் மற்ற இரு இந்தியர்கள். அதேநேரத்தில் சர்வதேச அளவில் டெஸ்டில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய பெருமை கபில்தேவ், டிவில்லியர்ஸ், அப்ரிதி ஆகியோர் வசம் உள்ளது.

107

இரண்டாவது நாளின் முதல் செஷனில் பாண்டியா 107 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக 100 ரன்கள் குவித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் பாண்டியா. இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்ததால், முதல் செஷன் கூடுதலாக 30 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

26

புஷ்பகுமாரா வீசிய ஒரு ஓவரில் பாண்டியா 26 ரன்கள் விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற பெருமை பாண்டியா வசமானது. சர்வதேச அளவில் பிரையன் லாரா, ஜார்ஜ் பெய்லி ஆகியோர் ஒரு ஓவரில் 28 ரன்கள் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக அப்ரிதி 27 ரன்கள் எடுத்துள்ளார்.


86

இலங்கைக்கு எதிராக 86 பந்துகளில் சதமடித்ததன் மூலம் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் அதிவேக சதமடித்த இந்தியர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் பாண்டியா. வீரேந்திர சேவாக் (78 பந்துகளில் சதம்) முதலிடத்தில் இருக்கிறார்.


7

இந்தப் போட்டியில் 7 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்தியர்கள் வரிசையில் சேவாக், ஹர்பஜன் ஆகியோருடன் 2-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார் பாண்டியா. நவ்ஜோத் சிங் சித்து 8 சிக்ஸர்களை விளாசியதே இன்றளவும் சாதனையாக உள்ளது. அவரும் இலங்கைக்கு எதிராகவே 8 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார்.

ஸ்கோர் போர்டு

இந்தியா


ஷிகர் தவன் (சி) சன்டிமல் (பி) புஷ்பகுமாரா 119 123
கே.எல்.ராகுல் (சி) கருணாரத்னே (பி) புஷ்பகுமாரா 85 135
சேதேஷ்வர் புஜாரா (சி) மேத்யூஸ் (பி) சன்டாகன் 8 33
விராட் கோலி (சி) கருணாரத்னே (பி) சன்டாகன் 42 84
அஜிங்க்ய ரஹானே (பி) புஷ்பகுமாரா 17 48
அஸ்வின் (சி) டிக்வெல்லா (பி) பெர்னாண்டோ 31 75
ரித்திமான் சாஹா (சி) பெரேரா (பி) பெர்னாண்டோ 16 43
ஹார்திக் பாண்டியா (சி) பெரேரா (பி) சன்டாகன் 108 96
குல்தீப் யாதவ் (சி) டிக்வெல்லா (பி) சன்டாகன் 26 73
முகமது சமி (சி) & (பி) சன்டாகன் 8 13
உமேஷ் யாதவ் நாட் அவுட் 3 14
உதிரிகள் 24
மொத்தம் (122.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 487


விக்கெட் வீழ்ச்சி: 1-188 (ராகுல்), 2-219 (தவன்), 3-229 (புஜாரா),
4-264 (ரஹானே), 5-296 (கோலி), 6-322 (அஸ்வின்), 7-339 (சாஹா),
8-401 (குல்தீப்), 9-421 (முகமது சமி), 10-487 (பாண்டியா).


பந்துவீச்சு: விஸ்வா பெர்னாண்டோ 26-3-87-2,
லஹிரு குமாரா 23-1-104-0, கருணாரத்னே 7-0-30-0,
தில்ருவான் பெரேரா 8-1-36-0, லக்ஷன் சன்டாகன் 35.3-4-132-5, புஷ்பகுமாரா 23-2-82-3.


இலங்கை


கருணாரத்னே (சி) சாஹா (பி) முகமது சமி 4 15
உபுல் தரங்கா (சி) சாஹா (பி) முகமது சமி 5 5
குஷல் மென்டிஸ் ரன் அவுட் (அஸ்வின்/குல்தீப்) 18 19
தினேஷ் சன்டிமல் (சி) ராகுல் (பி) அஸ்வின் 48 87
மேத்யூஸ் எல்பிடபிள்யூ (பி) பாண்டியா 0 3
டிக்வெல்லா (ஸ்டெம்பிங்) சாஹா (பி) குல்தீப் 29 31
தில்ருவான் பெரேரா (சி) பாண்டியா (பி) குல்தீப் 0 4
புஷ்பகுமாரா (பி) குல்தீப் 10 27
சன்டாகன் (சி) தவன் (பி) அஸ்வின் 10 24
விஸ்வா பெர்னாண்டோ (பி) குல்தீப் 0 10
லஹிரு குமாரா நாட் அவுட் 0 1
உதிரிகள் 11
மொத்தம் (37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 135


விக்கெட் வீழ்ச்சி: 1-14 (தரங்கா), 2-23 (கருணாரத்னே),
3-38 (மென்டிஸ்), 4-38 (மேத்யூஸ்), 5-101 (டிக்வெல்லா),
6-107 (பெரேரா), 7-125 (சன்டிமல்), 8-125 (புஷ்பகுமாரா),
9-135 (பெர்னாண்டோ), 10-135 (சன்டாகன்).

பந்துவீச்சு: முகமது சமி 6.5-1-17-2, உமேஷ் யாதவ் 3.1-0-23-0, ஹார்திக் பாண்டியா 6-1-28-1, குல்தீப் யாதவ் 13-2-40-4,
அஸ்வின் 8.4-2-22-2.


2-ஆவது இன்னிங்ஸ்


இலங்கை

கருணாரத்னே நாட் அவுட் 12 39
உபுல் தரங்கா (பி) உமேஷ் 7 31
புஷ்பகுமாரா நாட் அவுட் 0 8
உதிரிகள் 0
மொத்தம் (13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு) 19


விக்கெட் வீழ்ச்சி: 1-15 (தரங்கா).


பந்துவீச்சு: முகமது சமி 4-2-7-0, அஸ்வின் 6-4-5-0,
உமேஷ் யாதவ் 2-0-3-1, குல்தீப் யாதவ் 1-0-4-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com