பிசிசிஐ தலைவர், செயலரை நீக்குமாறு உச்ச நீதிமன்றத்திற்கு நிர்வாகக் குழு பரிந்துரை

லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த மறுத்து வரும் பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா உள்ளிட்ட நிர்வாகிகளை அவர்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து நீக்குமாறு உச்ச நீதிமன்றத்துக்கு
பிசிசிஐ தலைவர், செயலரை நீக்குமாறு உச்ச நீதிமன்றத்திற்கு நிர்வாகக் குழு பரிந்துரை

லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த மறுத்து வரும் பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா உள்ளிட்ட நிர்வாகிகளை அவர்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து நீக்குமாறு உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளது முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு.
ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை சீரமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது உச்ச நீதிமன்றம். அந்தக் கமிட்டியின் பரிந்துரைகளில் சிலவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை அமல்படுத்த மறுத்து வருகிறது பிசிசிஐ.
அதன் காரணமாக கடந்த ஜனவரியில் அப்போதைய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் உள்ளிட்ட சிலரை தகுதி நீக்கம் செய்தது உச்ச நீதிமன்றம். அதன்பிறகு பிசிசிஐயை நிர்வகிப்பதற்காக முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்.
அந்தக் குழு அவ்வப்போது பிசிசிஐயில் நிலவி வரும் சூழல்களை ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகிறது. அதன்படி தற்போது 5-ஆவது ஆய்வறிக்கையை அளித்துள்ளது. 26 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இதற்கு முன்னர் லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்தாமல் இழுத்தடித்த அப்போதைய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கியதைப் போன்று தற்போதைய பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா, செயலர் அமிதாப் செளத்ரி, பொருளாளர் அனிருத் செளத்ரி ஆகியோரையும் நீக்க வேண்டும்.
சி.கே.கன்னா உள்ளிட்ட நிர்வாகிகள் லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்தாமல் 6 மாத காலத்தை வீணடித்துள்ளனர். எனவே முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் உள்ளிட்டோரை நீக்கியதைப் போன்றே சி.கே.கன்னா உள்ளிட்டோரையும் நீக்கினால் மட்டுமே அது நியாயமானதாக இருக்கும். பிசிசிஐயின் தற்போதைய நிர்வாகிகள் லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
பிசிசிஐக்கு தேர்தல் நடைபெறும் வரை அதை நிர்வகிக்கும் பொறுப்பை பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
கடந்த ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை தவறாக பயன்படுத்தி பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, நிர்வாக அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் குழு ஆகியோரை பிசிசிஐ நிர்வாகிகள் வெளியேற்றியிருக்கிறார்கள்.
தில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகியான ஓய்வு பெற்ற நீதிபதி விக்ரம்ஜித் சென், 'லோதா கமிட்டியின் பரிந்துரைக்கு முரணாக பிசிசிஐ நிர்வாகிகள் செயல்படுகிறார்கள்' என கூறியிருக்கிறார்.
பிசிசிஐக்கு வரும் புகார்கள் உள்ளிட்ட விவகாரங்களை கவனிக்கும் விசாரணை அதிகாரியாக இருந்த ஏ.பி.ஷாவின் பதவிக்காலம் கடந்த செப்டம்பரோடு முடிந்தது. அதன்பிறகு அந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற 6 நீதிபதிகளின் பெயர்களை நிர்வாகக் குழு பரிந்துரைத்தது. எனினும் இதுவரை பிசிசிஐ அந்தப் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com