புரோ கபடி: யு.பி.யோதாவை வீழ்த்தியது யு-மும்பா

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 34-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியைத் தோற்கடித்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் யு-மும்பா ரைடரை மடக்கிப் பிடிக்கும் யு.பி.யோதா அணியினர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் யு-மும்பா ரைடரை மடக்கிப் பிடிக்கும் யு.பி.யோதா அணியினர்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 34-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியைத் தோற்கடித்தது.
முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த யு-மும்பா அணி, 2-ஆவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடி யு.பி.யோதாவை வீழ்த்தியது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய யு.பி.யோதா அணி 2-ஆவது நிமிடத்திலேயே 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 3-ஆவது நிமிடத்தில் யு-மும்பா கேப்டன் அனுப் குமார் தனது ரைடின் மூலம் தனது அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.
அதேநேரத்தில் தொடர்ந்து அபாரமாக ஆடிய யு.பி.யோதா அணி, 9-ஆவது நிமிடத்தில் யு-மும்பா அணியை ஆல் அவுட்டாக்கியது. இதன்மூலம் அந்த அணி 12-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு அனுப் குமாரும், சபீர் பாபுவும் தங்களுடைய அபார ரைடின் மூலம் புள்ளிகளைக் கைப்பற்ற, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 12-15 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது யு-மும்பா.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய யு-மும்பா, ஆரம்பத்திலேயே யு.பி.யோதாவை ஆல் அவுட்டாக்கியது. இதன்மூலம் ஸ்கோரை சமன் (16-16) செய்த யு-மும்பா அணி, 22-ஆவது நிமிடத்தில் 19-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு யு.பி.யோதா வீரர் ரிஷங்க் தனது ரைடின் மூலம் இரு புள்ளிகளைப் பெற்றுத் தர, 25 நிமிடங்கள் முடிவில் அந்த அணி 20-19 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு இரண்டாவது முறையாக யு-மும்பாவை ஆல் அவுட்டாக்கிய யு.பி.யோதா அணி 30-ஆவது நிமிடத்தில் 29-26 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து சபீர் பாபு, தர்ஷன் ஆகியோரின் ஆட்டத்தால் 34-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் (31-31) செய்தது யு-மும்பா.
ஆட்டம் முடிய 5 நிமிடங்களே இருந்த நிலையில் இரண்டாவது முறையாக யு.பி.யோதாவை ஆல் அவுட்டாக்கிய யு-மும்பா அணி 35-31 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு யு.பி.யோதா அணி கடுமையாகப் போராடியபோதும், யு-மும்பாவின் முன்னிலையை மட்டுமே குறைக்க முடிந்ததேயொழிய தோல்வியில் இருந்து தப்ப முடியவில்லை. இறுதியில் யு-மும்பா அணி 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
யு-மும்பா தரப்பில் சபீர் பாபு 13 புள்ளிகளையும், கேப்டன் அனுப் குமார் 8 புள்ளிகளையும் ரைடின் மூலம் கைப்பற்றினர். யு.பி.யோதா தரப்பில் ரிஷங்க் தனது அபார ரைடின் மூலம் 14 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
ஜெய்ப்பூர் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது.
இன்றைய ஆட்டங்கள்
தெலுகு டைட்டன்ஸ்-யு மும்பா
நேரம்: இரவு 8
யு.பி.யோதா-ஹரியாணா ஸ்டீலர்ஸ்
நேரம்: இரவு 9
இடம்: லக்னெள
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com