அர்ஜுனா விருதை இந்திய பெண்களுக்கு சமர்ப்பிக்கிறேன்: பெம்பெம் தேவி

இந்திய முன்னாள் கால்பந்து வீராங்கனையான ஒய்னம் பெம்பெம் தேவி, தனது அர்ஜுனா விருதை இந்தியப் பெண்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.

இந்திய முன்னாள் கால்பந்து வீராங்கனையான ஒய்னம் பெம்பெம் தேவி, தனது அர்ஜுனா விருதை இந்தியப் பெண்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.
இதுகுறித்து அவர் இணையதளம் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த நேர்க்காணலில் கூறியதாவது:
இந்தியாவில் இருக்கும் எந்தவொரு விளையாட்டு வீரருக்குமான உச்சபட்ச அங்கீகாரம் அர்ஜுனா விருது. எந்தவொரு விளையாட்டு வீரர்/வீராங்கனையுமே அங்கீகாரத்துக்காக விளையாடுவதில்லை. ஆனால், அது கிடைக்கும்போது திருப்தியளிப்பதாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நான் செய்த தியாகங்கள் வீண்போகவில்லை.
இந்தியாவில், தான் சார்ந்த துறைகளில் உள்ள தடைகளை தினந்தோறும் கடந்து முன்னேறி வரும் பெண்களுக்கு எனது அர்ஜுனா விருதை சமர்ப்பணம் செய்கிறேன்.
இந்தியாவில் உள்ள சமூகவியல் சார்ந்த தடைகள் சில வேளைகளில் பெண்களை கால்பந்து விளையாட அனுமதிப்பதில்லை. எனக்கான இந்த அர்ஜுனா விருது, அனைத்து பெற்றோர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். மகளிர் கால்பந்து விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் அர்ஜுனா விருது பெறலாம் என்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் கால்பந்து அணி தங்கம் வென்றதை அடுத்து ஓய்வு முடிவை அறிவித்தேன். 'உங்களுக்கு மரியாதையான வகையில் பிரிவுபச்சாரம் அளிக்க விரும்புகிறோம்' என்று கூறிய அகில இந்திய கால்பந்து சம்மேளனம், எனது ஓய்வு முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியது. இந்திய கால்பந்து வரலாற்றில் முன்பு இதுபோல் நடந்துள்ளதா எனத் தெரியவில்லை. எனக்கு அளித்த இந்த கெளரவத்துக்காகவும், தொடர்ச்சியான ஆதரவுக்காகவும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பெம்பெம் தேவி கூறினார்.
கடந்த 1995-ஆம் ஆண்டில் தனது சர்வதேச கால்பந்து பயணத்தை தொடங்கிய பெம்பெம் தேவி, கடந்த ஆண்டு அதிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக மொத்தம் 85 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 32 கோல்கள் அடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com