உலக பாட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த், சாய் பிரணீத்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
லூகாஸுக்கு எதிரான 2-ஆவது சுற்றில் ஆக்ரோஷமாக ஆடிய ஸ்ரீகாந்த்.
லூகாஸுக்கு எதிரான 2-ஆவது சுற்றில் ஆக்ரோஷமாக ஆடிய ஸ்ரீகாந்த்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் சாய்னா நெவால் 21-11, 21-12 என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் சப்ரினாவை தோற்கடித்தார்.
வெற்றி குறித்துப் பேசிய சாய்னா, 'இது சிக்கலான ஆட்டம். சப்ரினா மிக வலுவான வீராங்கனை. எனினும் சிறப்பாக ஆடி அவரை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
சாய்னா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை சந்திக்கிறார். சங் ஜி ஹியூன் தனது 2-ஆவது சுற்றில் 21-9, 21-19 என்ற நேர் செட்களில் இந்தியாவின் தன்வி லேடுவை தோற்கடித்தார்.
ஸ்ரீகாந்த் வெற்றி: ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-9, 21-17 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் லூகாஸ் கோர்வீயை தோற்கடித்தார். அடுத்ததாக போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் சாய் பிரணீத் 14-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோணியை வீழ்த்தினார்.
வெற்றி குறித்துப் பேசிய சாய் பிரணீத், 'இது மிகக் கடினமான ஆட்டம். ஆரம்பத்தில் அந்தோணி வேகமாக ஆடியதால், நான் சற்று தடுமாறினேன். ஆனால் நான் மெதுவாக வேகத்தை அதிகரிக்க, ஆட்டம் எனது வசமானது. அந்தோணி வலுவான வீரர். இதற்கு முன்னரும் நான் அவருடன் மோதியிருக்கிறேன். அதோடு ஒப்பிடுகையில் அவருடைய ஆட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com