முதல் நாளில் இந்தியா 371/4: கோலி 156*, விஜய் 155

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய், கோலி ஆகிய இருவரும்...
முதல் நாளில் இந்தியா 371/4: கோலி 156*, விஜய் 155

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய், கோலி ஆகிய இருவரும் தலா 150 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்கள்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் தில்லி ஃபெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.  தலா 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தத் தொடரில் 3-வது டெஸ்ட் ஆட்டம் தொடங்கியுள்ளது.  மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் டிரா ஆன நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 3 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்று இந்திய வீரர்கள் முனைப்புடன் களமிறங்கியுள்ளார்கள்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி,  பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராகுல், உமேஷ் யாதவுக்குப் பதிலாக தவன், ஷமி அணியில் இடம்பெற்றுள்ளார்கள். கடந்த 12 இன்னிங்ஸில் 9 அரை சதங்கள் எடுத்தும் ராகுலை அணியிலிருந்து நீக்கியுள்ளது பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.  

முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் அமர்க்களமாக இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினார் விஜய். தவனும் விரைவாக ரன்கள் குவித்ததால் முதல் 10 ஓவரில் இந்திய அணி நான்கு ரன்ரேட்டில் ரன்கள் எடுத்து வந்தது. ஆனால் 10வது ஓவரின் கடைசிப் பந்தில் தில்ரூவன் பெரேரா பந்துவீச்சில் 23 ரன்களில் வெளியேறினார் தவன். தில்ரூவன் பெரேரா டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ள 100-வது விக்கெட்டாகும் இது. 

அடுத்து வந்த புஜாரா, தவனைப் போலவே 4 பவுண்டரிகள் அடித்து 23 ரன்களில் லாஹிரு காமேஜ் பந்துவீச்சில் வீழ்ந்தார். 2 விக்கெட்டுகள் வீழ்ந்தபிறகும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்துவந்தார்கள். இதனால் ரன்ரேட் நான்கிலேயே நீடித்தது. முரளி விஜய் 68 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இது அவருடைய 16-வது அரை சதமாகும். இந்தத் தொடரில் இடம்பெற்ற இரு டெஸ்டுகளிலும் முரளி விஜய் சிறப்பாக விளையாடியுள்ளதால் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. விஜய் 51, கோலி 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். முதல் நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தாலும் விரைவாக ரன்கள் குவித்ததால் ரன்ரேட் 4.29 ஆக இருந்தது. 

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் மேலும் வேகமெடுத்தது. கடகடவென பவுண்டரிகள் அடித்த விராட் கோலி, 10 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் அரை சதமெடுத்தார். விஜய் - கோலி கூட்டணி 121 பந்துகளில் 100 ரன்களை எடுத்து இலங்கை அணிக்கு மேலும் நெருக்கடி கொடுத்தது. கோலி அளவுக்கு பவுண்டரிகளை அடிக்காமல் போனாலும் பந்துகளை அதிகம் வீணடிக்காமல் ஆடிய விஜய் 163 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார். இது அவருடைய 11-வது டெஸ்ட் சதமாகும். கடந்த டெஸ்ட் போட்டியில் சதமெடுத்த விஜய், மீண்டுமொருமுறை தன்னை நிரூபித்துள்ளார்.

முதல் நாளின் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 57 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. இன்றைய நாளின் 2-வது பகுதியில் 129 ரன்கள் எடுத்தது இந்திய அணி. 

72-வது ஓவரிலேயே இந்திய அணி 300 ரன்களைக் கடந்தது. இதன்பின்னர் விஜய் 251 பந்துகளிலும் கோலி 178 பந்துகளிலும் தலா 150 ரன்களைப் பூர்த்தி செய்தார்கள். இது முரளி விஜய்யின் நான்காவது 150+ ஸ்கோராகும். இலங்கைக்கு எதிராக முதல்முறையாக 150 ரன்களைக் கடந்துள்ளார். இதுவரை இரட்டைச் சதம் எடுக்காத விஜய் (அதிகபட்ச டெஸ்ட் ரன் - 167), இந்த டெஸ்டில் இரட்டைச் சதம் எடுப்பார் என அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் 155 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார் விஜய். இதன்பின்னர் வந்த ரஹானே இந்த டெஸ்டிலும் சொதப்பினார். சன்டகன் பந்துவீச்சில் 1 ரன்னில் வெளியேறினார். சன்டகன் அடுத்தடுத்த ஓவர்களில் ஸ்டம்பிங் மூலம் இரு விக்கெட்டுகள் எடுத்து இலங்கை அணிக்கு ஆறுதல் அளித்தார். 

3-வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது. கோலி 156, ரோஹித் சர்மா 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com