டெஸ்ட் தரவரிசை: 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார் கோலி

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் தரவரிசை: 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார் கோலி

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக 6-ஆவது இடத்தில் இருந்த கோலி, அந்தத் தொடரில் மொத்தமாக 610 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் தில்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, ஒரு இன்னிங்ஸில் அவர் விளாசிய 243 ரன்கள் அவரது தனிப்பட்ட அதிகபட்சமாகும்.
இவை தவிர 2 முறை இரட்டைச் சதம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் சதமடித்த முதல் கேப்டன், 6 முறை இரட்டைச் சதமடித்த முதல் கேப்டன் போன்ற சாதனைகளையும் படைத்தார்.
இவற்றின் காரணமாக தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், சக நாட்டவரான சேதேஷ்வர் புஜாரா, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார் கோலி.
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 938 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கும், கோலிக்கும் (893) இடையே 45 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளன. 
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இதர இந்திய வீரர்களான முரளி விஜய் 3 இடங்களும், ரோஹித் சர்மா 6 இடங்களும் ஏற்றம் கண்டு முறையே 25 மற்றும் 40-ஆவது இடத்துக்கு வந்துள்ளனர். புஜாரா 2 இடங்கள் கீழிறங்கி 4-ஆவது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், ஜடேஜா ஓரிடம் சறுக்கி 3-ஆவது இடத்துக்கு வர, இந்தத் தொடரில் அவ்வளவாக சோபிக்காத அஸ்வின் அதே 4-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா 2-ஆவது இடத்தில் தொடர, அஸ்வின் ஓரிடத்தை இழந்து 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ஒரு புள்ளியை இழந்த இந்தியா, முதலிடத்திலும், இலங்கை 6-ஆவது இடத்திலும் தொடருகிறது.
சண்டிமால் முன்னேற்றம்: இந்தியாவுக்கு எதிரானடெஸ்ட் தொடரில் மொத்தமாக 366 ரன்கள் எடுத்த இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், பேட்ஸ்மேன்கள் வரிசையில் 8 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்துக்கு வந்துள்ளார். முதல் 10 இடங்களுக்குள்ளாக இவர் வருவது இதுவே முதல் முறையாகும்.
அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 7 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்துக்கும், தனஞ்ஜெயா டி சில்வா 9 இடங்கள் முன்னேறி 47-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.


மூன்றிலும் முதலிட வாய்ப்பு

எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு முதலிடத்துக்கு வரும் பட்சத்தில், ஐசிசியின் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஒரே நேரத்தில் முதலிடத்தில் இருக்கும் பெருமைக்கு உரியவராவார் கோலி.

முன்னதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் 2005 டிசம்பர் முதல் 2006 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இவ்வாறு 3 போட்டிகளுக்குமான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சகநாட்டவரான மேத்யூ ஹெய்டனும் அந்தப் பெருமையை பெற்றிருந்தார்.


புள்ளிகள் வித்தியாசம்...

இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்பாக, தரவரிசையில் புஜாரா 2-ஆவது இடத்திலும், கோலி 5-ஆவது இடத்திலும் இருந்தபோது இருவருக்கும் இடையேயான புள்ளிகள் வித்தியாசம் 11-ஆக இருந்தது. ஆனால், தற்போது 2-ஆவது இடத்தில் இருக்கும் கோலிக்கும் (893), 5-ஆவது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்தின் கேன் வில்லியன்சனுக்கும் (865) இடையே 28 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com