இந்தியர்களை எங்கள் பந்துவீச்சாளர்கள் திணறடிப்பர்: தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் சவால்

இந்திய வீரர்களை நிச்சயம் எங்களின் பந்துவீச்சாளர்கள் திணறடிப்பர் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் சவால் விடுத்தார்.
இந்தியர்களை எங்கள் பந்துவீச்சாளர்கள் திணறடிப்பர்: தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் சவால்

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. தற்போது இலங்கையுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை அடுத்து இந்திய அணி அங்கு செல்கிறது.

ஜனவரி 13, 2018-ல் தொடங்கும் இந்தத் தொடரில் முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும், 6 ஒருநாள் போட்டிகளும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களும் நடைபெறவுள்ளன.

நடப்பு சீசனில் சொந்த மண்ணில் விளையாடிய இந்திய அணி மாபெரும் வெற்றிகளைக் குவித்து பல மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. குறிப்பாக கேப்டன் விராட் கோலி மற்றும் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஆகியோர் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.

மேலும், புஜாரா, ஜடேஜா, விஜய் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் இந்திய அணிக்கு சவால் விடுத்துள்ளார். அதில்,

இந்திய அணிக்கு எங்கள் தொடரில் தான் சவால் நிறைந்து உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிப்பர். எனவே இந்த தொடர் சவால் நிறைந்ததாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சும் சிறப்பாகவே உள்ளது. இருப்பினும் இங்கு சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அவர்களால் சாதிக்க முடியும் என்றார்.

இருப்பினும், கடந்த முறை தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் பலர் விளையாடியுள்ளதால் நிச்சயம் இம்முறை அதிக நம்பிக்கையுடன் களமிறங்கி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரைக் கைப்பற்றுவோம் என்று புஜாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்திய அணி அந்நிய மண்ணில் பெரிய அளிவலான வெற்றிகளைப் பதிவு செய்ததில்லை. இதனிடையே அடுத்த சீசனில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என பலத்த சவால் இந்திய அணிக்கு காத்துக்கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com