ராஸ் டெய்லர் சதம்: 2-ஆவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து 291 ரன்களில் டிக்ளேர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது 2-ஆவது இன்னிங்ஸில் 77.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
ராஸ் டெய்லர் சதம்: 2-ஆவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து 291 ரன்களில் டிக்ளேர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது 2-ஆவது இன்னிங்ஸில் 77.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாவது நாளான திங்கள்கிழமை தொடங்கிய அந்த அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் 2 நாள்கள் இருக்கின்ற நிலையில், அந்த அணி இன்னும் 414 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
முன்னதாக, இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்யத் தொடங்கிய நியூஸிலாந்து அணி, 102.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து373 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜீத் ராவல் 84 ரன்களும், கிரான்ட்ஹோம் 58 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷானன் கேப்ரியல் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 64 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. ரேமன் ரீஃபர் 22, மிகெல் கம்மின்ஸ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மூன்றாவது நாளான திங்கள்கிழமை அந்த அணி 221 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
நியூஸிலாந்து டிக்ளேர்: இதையடுத்து, 152 ரன்கள் முன்னிலையுடன் நியூஸிலாந்து 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜீத் ராவல் (4 ரன்), டாம் லாதம் (22 ரன்) ஆகியோர் வெளியேற கேப்டன் வில்லியம்சன் 54 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
4 ஆவது விக்கெட்டாக களம் கண்ட ராஸ் டெய்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் கடக்க மறுபுறம் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்திருந்தபோது வில்லியம்சன் டிக்ளேர் செய்தார். அப்போது, டெய்லர் 107 ரன்களுடனும், டிம் சௌதி 22 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மே.இ.தீவுகள்-30/2: அதைத் தொடர்ந்து, 444 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான கிரென் பாவெல், டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் 'டக்' அவுட்டாகி வெளியேற, அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஹெட்மைர், டிம் சௌதி வீசிய பந்தில் வாக்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
இவ்வாறாக ஆட்ட நேர முடிவில் அந்த அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்தது. 8 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், அந்த அணி இன்னும் 414 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
குரோவுக்கு சமர்ப்பணம்: டெய்லர்
புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு மரணம் அடைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவுக்கு தனது 17-ஆவது சதத்தை சமர்ப்பிப்பதாக ராஸ் டெய்லர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
83 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தனது 17-ஆவது சதத்தை பதிவு செய்ததன் மூலம், அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் (63 போட்டிகளில் 17 சதம்), குரோவ் (77போட்டிகளில் 17 சதம்) ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார் டெய்லர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com