விளையாட்டு வீரர்களை மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்: பிரதமர் மோடிக்கு சச்சின் கடிதம்

சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்
விளையாட்டு வீரர்களை மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்: பிரதமர் மோடிக்கு சச்சின் கடிதம்

சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து விளையாட்டு வீரர்கள் சார்பிலும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். அதாவது, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வீரர்-வீராங்கனைகளை மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சேர்த்து அவர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய விளையாட்டுத் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகிய அமைச்சகங்களிடம் இந்தக் கோரிக்கையை ஏற்கெனவே முன்வைத்தேன். ஆனால், எனது யோசனையை வரவேற்ற அமைச்சகங்கள் அதை சாத்தியப்படுத்துவது குறித்து சந்தேகம் தெரிவித்து எனக்கு பதில் கடிதம் அனுப்பின. அந்த அமைச்சகங்களுடைய நிலைமை எனக்கு புரிகிறது. இருப்பினும், சோதனை அடிப்படையிலாவது அதை சாத்தியப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். எத்தனை வீரர்கள் பயனடைகிறார்கள்; அவர்களுக்கு எவ்வளவு மருத்துவச் செலவு ஆகிறது என்பதை ஆய்வு செய்து பின்னர் அதை படிப்படியாக அமலுக்கு கொண்டு வரலாம்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் முகமது ஷாகித், கல்லீரல் பாதிப்பால் காலமானார். இறுதிக்கட்ட சிகிச்சையில் இருந்தபோதே அவருக்கு உதவிகள் கிடைத்தன. இந்த நிலை மாற வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com