ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா: 3-வது டெஸ்ட் போட்டியில் மகத்தான வெற்றி!

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி...
ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா: 3-வது டெஸ்ட் போட்டியில் மகத்தான வெற்றி!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்ற ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரையும் வென்றுள்ளது. 

பெர்த் நகரில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று, முதலில் பேட் செய்த இங்கிலாந்து 115.1 ஓவர்களில் 403 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிகபட்சமாக 140 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள்  வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா, 179.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 662 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 239, மிட்செல் மார்ஷ் 181 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 38.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. டேவிட் மலான் 28, ஜானி பேர்ஸ்டோவ் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இங்கிலாந்து 127 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 6 விக்கெட்டுகளே இருந்தன. 

இன்று மழை காரணமாக ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்ததால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. பிறகு தொடங்கியபோது, பேர்ஸ்டோவ் ஒரு ரன்னும் கூடுதலாகச் சேர்க்காமல் அதே 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் டேவிட் மலானைத் தவிர இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். மொயீன் அலி 11 ரன்களிலும் மலான் 54 ரன்களிலும் ஓவர்டன் 12 ரன்களிலும் வெளியேறியதால் இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது. பிராட் டக் அவுட் ஆகி வெளியேறினார். 22 ரன்களில் கடைசியாக வோக்ஸ் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவின் ஹேஸில்வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் 3-வது டெஸ்ட் போட்டியை ஆஸி. அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்தத் தொடரில் அந்த அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது. 

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்குவது இது முதல் முறையாகும். கடந்த முறை 2015-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com