ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 44.5 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் பேட் செய்த இந்திய அணி, 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக, டாஸ் வென்ற இந்தியா பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இலங்கையில் தொடக்க வீரர் குணதிலகா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உடன் வந்த உபுல் தரங்கா அதிகபட்சமாக 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் எடுத்தார். அவரும், சமரவிக்ரமாவும் இணைந்து 2-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர். இதில் சமரவிக்ரமா 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார். 
அடுத்து ஆடிய விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. மேத்யூஸ் 17, குணரத்னே 17 ரன்களில் பெவிலியன் திரும்ப, கேப்டன் பெரேரா, டிக்வெல்லா, பதிரானா, தனஞ்ஜெயா, லக்மல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
இந்திய தரப்பில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
தவன் அசத்தல்: இதையடுத்து 216 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் 7 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த தவன்-ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி அபாரமாக ஆடி 2-ஆவது விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது.
ஷ்ரேயஸ் 44 பந்துகளிலும், தவன் 46 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். இந்நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் துணையுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தினார் தவன். அவர் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரிகள் உள்பட 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாகவும், ஷிகர் தவன் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

துளிகள்...

2
இன்றைய ஆட்டத்தின் மூலம், ஒருநாள் போட்டியில் குறைந்த (95) இன்னிங்ஸ்களில் 4,000 ரன்களை எட்டிய 2-ஆவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஷிகர் தவன் பெற்றார். முன்னதாக, விராட் கோலி 93 இன்னிங்ஸ்களில் அந்த இலக்கை எட்டியுள்ளார்.

55
இலங்கை இன்னிங்ஸின்போது அந்த அணியின் கடைசி 7 விக்கெட்டுகள் மொத்தமாக 55 ரன்களே எடுத்தன. 27-ஆவது ஓவர் வரையில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.

1000
இன்றைய ஆட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்தார் உபுல் தரங்கா. இதையடுத்து 2017-ஆம் ஆண்டில் 1000 ரன்கள் கடந்த வீரர்கள் வரிசையில் கோலி, ரோஹித்துடன் உபுல் தரங்கா இணைந்துள்ளார்.

5-1
விசாகப்பட்டினத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற 6 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 5 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் இங்கு நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் வீழ்ந்தது இந்தியா.

ஸ்கோர் போர்டு

இலங்கை

குணதிலகா (சி) சர்மா (பி) பும்ரா
உபுல் தரங்கா (ஸ்டம்ப்டு) தோனி (பி) குல்தீப்
சமரவிக்ரமா (சி) தவன் (பி) சாஹல்
ஏஞ்ஜெலோ மேத்யூஸ் (பி) சாஹல்
நிரோஷன் டிக்வெல்லா (சி) ஷ்ரேயஸ் (பி) குல்தீப்
அசெலா குணரத்னே (சி) தோனி (பி) புவனேஸ்வர்
திசர பெரேரா எல்பிடபிள்யூ (பி) சாஹல்
சசித் பதிரானா (சி) சாஹல் (பி) பாண்டியா
அகிலா தனஞ்ஜெயா (பி) குல்தீப்
சுரங்கா லக்மல் எல்பிடபிள்யூ (பி) பாண்டியா 
நுவான் பிரதீப் நாட் அவுட்
உதிரிகள் 
மொத்தம் (44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 215

விக்கெட் வீழ்ச்சி: 1-15(குணதிலகா), 2-136(சமரவிக்ரமா), 3-160(உபுல் தரங்கா), 4-168(டிக்வெல்லா), 5-189(மேத்யூஸ்), 6-197(பெரேரா), 7-208(பதிரானா), 8-210(தனஞ்ஜெயா), 9-211(லக்மல்), 10-215(குணரத்னே).

பந்துவீச்சு: புவனேஸ்வர் 6.5-0-35-1, பும்ரா 8-1-39-1, பாண்டியா 10-1-49-2, குல்தீப் 10-0-42-3, சாஹல் 10-3-46-3.


இந்தியா ரன் பந்து

ரோஹித் சர்மா (பி) தனஞ்ஜெயா 7 14
ஷிகர் தவன் நாட் அவுட் 100 85
ஷ்ரேயஸ் ஐயர் (சி) லக்மல் (பி) பெரேரா 65 63
தினேஷ் கார்த்திக் நாட் அவுட் 26 31
உதிரிகள் 21 
மொத்தம் (32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 219
விக்கெட் வீழ்ச்சி: 1-14(ரோஹித்), 2-149(ஷ்ரேயஸ்).
பந்துவீச்சு: லக்மல் 5-2-20-0, தனஞ்ஜெயா 7.1-0-53-1, 
மேத்யூஸ் 3-0-30-0, பதிரானா 4-0-33-0, நுவான் 3-0-10-0, 
பெரேரா 5-0-25-1, குணரத்னே 4-0-30-0, குணதிலகா 1-0-12-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com