இலங்கை தொடர் வயிட்-வாஷ் எதிரொலி: ஐசிசி தரவரிசைகளில் மாற்றம், இந்தியா முன்னேற்றம்!

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வயிட்-வாஷ் முறையில் வெற்றிகண்டு கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து...
இலங்கை தொடர் வயிட்-வாஷ் எதிரொலி: ஐசிசி தரவரிசைகளில் மாற்றம், இந்தியா முன்னேற்றம்!

இந்தியா, இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில், 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை இந்தியா வயிட்-வாஷ் முறையில் வீழ்த்தி வெற்றி கண்டது.

இதையடுத்து வெளியிடப்பட்ட ஐசிசி டி20 தரவரிசைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தொடரில் பங்கேற்காத விராட் கோலி, சரிவைச் சந்தித்தார். கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா முன்னேற்றம் கண்டார்.

ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது. இந்த தொடருக்கு முன்னதாக 119 புள்ளிகளுடன் இந்தியா, தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது இந்த தொடரைக் கைப்பற்றியதுடன் 121 புள்ளிகளைப் பெற்று இங்கிலாந்து, நியூஸிலாந்து, மே.இ.தீவுகளைக் கடந்து தரவரிசையில் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்த தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற்ற விராட் கோலி, 824 புள்ளிகளில் இருந்து 776 புள்ளிகளுக்கு சரிந்து முதலிடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்கு இறங்கினார். 

இதனால், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் முதலிடத்துக்கு முன்னேறினார். ஐசிசி விதிகளின்படி தனிப்பட்ட வீரர் ஒரு போட்டியில் இருந்து ஓய்வு பெற்றால் அவரது தரவரிசைப் புள்ளிகளில் இருந்து 2 சதவீதம் குறைக்கப்படும். இந்த தொடரில் இருந்தே விராட் கோலி விலகியுள்ளதால் அவருக்கு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும், ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதுபோல டெஸ்ட் போட்டிகளில் 2-ஆம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட துவக்க வீரர் லோகேஷ் ராகுல், 23 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 4-ஆம் இடத்தைப் பிடித்தார். கேப்டன் ரோஹித் ஷர்மா, 6 இடங்கள் முன்னேறி 14-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் கடைசி டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஜஸ்ப்ரீத் பும்ரா, விதிகள் காரணமாக முதலிடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்கு சரிந்தார். இது, ஆப்கானிஸ்தான் வீரர் 2-ஆம் இடத்தைப் பெற்றுத்தந்தது. அதுபோல பாகிஸ்தான் வீரர் இமாத் வாஸிமுக்கு முதலிடத்தைப் பெற வைத்தது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய யசுவேந்திர சாஹல், 14 இடங்கள் முன்னேறி 16-ஆவது இடத்தைப் பிடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com