99 ரன்னில் கேட்ச் கொடுத்த வார்னர்! நோ பால் வீசியதால் தப்பிப் பிழைத்தார்!

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி இன்று மெர்ல்பர்னில் தொடங்கியுள்ளது...
99 ரன்னில் கேட்ச் கொடுத்த வார்னர்! நோ பால் வீசியதால் தப்பிப் பிழைத்தார்!

இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் வார்னர் சதமெடுத்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி இன்று மெர்ல்பர்னில் தொடங்கியுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டது ஆஸ்திரேலிய அணி. எனவே, இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களம் காணும் ஆஸ்திரேலியா. மறுபுறம், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து விளையாடுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு வார்னரும் பேன்கிராஃப்டும் 100 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள். 64 பந்துகளில் அரை சதமெடுத்தார் வார்னர். உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. 

அணியின் ஸ்கோர் 122-ல் இருந்தபோது நிதானமாக ஆடிவந்த பேன்கிராஃப்ட் 95 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதன்பிறகு சதத்தை நெருங்கியபோது 99 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த வார்னர் எதிர்பாராதவிதமாக டாம் கியூரன் பந்துவீச்சில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 1 ரன்னில் சதத்தைத் தவறியதால் மிகவும் சோகமாக களத்தை விட்டு வார்னர் வெளியேறத் தயாராக இருந்தபோது கியூரன் நோ பால் வீசியதாக நடுவர் அறிவித்தார். இதனால் பெரிய கண்டத்திலிருந்து தப்பினார் வார்னர்.  அடுத்தப் பந்திலேயே ஒரு ரன் எடுத்து சதத்தைப் பூர்த்தி செய்தார் வார்னர். இது அவருடைய 21-வது டெஸ்ட் சதமாகும். ஆனால் அதிக ரன்கள் சேர்க்கமுடியாமல் 103 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் வீழ்ந்தார் வார்னர். அடுத்தப் பத்தாவது ஓவரில் கவாஜாவை 17 ரன்களில் வெளியேற்றினார் பிராட். இதனால் 38 ரன்கள் இடைவெளிக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது இங்கிலாந்து. 

ஆஸ்திரேலிய அணி 61 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 29 ரன்கள், மார்ஷ் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com