இதற்காக நாங்கள் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளோம்: பிருத்வி ஷா

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நியூஸிலாந்து புறப்பட்டது.
இதற்காக நாங்கள் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளோம்: பிருத்வி ஷா

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் ஜனவரி 13-ந் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது.

கடந்த முறை இந்தியா, இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்டிருந்தது. அதற்கு முன்பாக 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இப்போட்டித் தொடருக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு: 

பிருத்வி ஷா (கேப்டன்), சுபம் கில் (துணை கேப்டன்), மன்ஜோத் கல்ரா, ஹிமான்சு ரானா, அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஆர்யன் ஜுயல் (விக்கெட் கீப்பர்), ஹார்விக் தேசாய், சிவம் மாவி, கமலேஷ் நாகர்கோட்டி, இஷான் போரெல், அர்ஷ்தீப் சிங், அனுகுல் ராய், சிவா சிங், பங்கஜ் யாதவ்.

இந்நிலையில், இதில் பங்கேற்கவுள்ள இந்திய அணி புதன்கிழமை நியூஸிலாந்து புறப்பட்டது. இதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் பிருத்வி ஷா கூறியதாவது:

இந்த உலகக் கோப்பை போட்டித் தொடர் எங்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த களமாகும். இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் அனைவரும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறோம். எனது அணியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஒரு கேப்டனாக இந்திய அணியை முன்னின்று வழிநடத்திச் செல்வேன் என்றார்.

இந்த சந்திப்பின் போது பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடனிருந்தார்.

இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர், 2008-ம் ஆண்டு இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய அணியின் மூத்த வீரர்களான ஷிகர் தவன் உள்ளிட்டோரும் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி மற்றும் அதன் கேப்டன் பிருத்வி ஷா உள்ளிட்டோருக்கு தங்கள் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com