

தெற்கு காஷ்மீரிலுள்ள கிராமம் ஒன்றில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
மேலும், பயங்கரவாதிகளின் பதில் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தெற்கு காஷ்மீரிலுள்ள ஃபிரிஸால் நகரையடுத்த நாகபால் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராணுவத்தினரும், துணை ராணுவப் படையினரும் போலீஸாருடன் சேர்ந்து அந்தப் பகுதிக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
எனினும், அங்குள்ள அனைத்து வீடுகளிலும் சோதனையிட்ட பிறகும் பயங்கரவாதிகள் யாரும் சிக்கவில்லை. அப்போது, குறிப்பிட்ட வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸாரும், ராணுவத்தினரும் அந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து, அவர்கள் உள்ளே சென்று சோதனையிட்டபோது அங்கு போலியாக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையினுள் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
அதையடுத்து, அந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டதில் ரகுவீர் சிங், கோபால் சிங் படோரியா ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து ராணுவத்தினரும் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், 3 பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த காடுகளுக்குள் மறைந்தனர்.
துப்பாக்கிச் சண்டையின்போது, அந்த வீட்டு உரிமையாளரின் மகன் குறுக்கே பாய்ந்ததில் அவர் மீது குண்டு பாய்ந்தது. இதில், அவர் உயிரிழந்தார்.
மேலும், 3 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதன் மூலம் பெரும் வெற்றி ஈட்டப்பட்டுள்ளது.
எனினும், துரதிருஷ்டவசமாக 2 வீரர்களும், அந்த வீட்டு உரிமையாளரின் மகனும் குண்டடிபட்டு உயிரிழந்து விட்டனர்' என்றார்.
பாகிஸ்தானே பயங்கரவாதத்தை தூண்டுகிறது: பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டி வருவது பாகிஸ்தான் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தான் தான் ஈடுபட்டு வருகிறது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
இத்தகைய சோதனையான தருணங்களில், நமது பாதுகாப்புப் படையினர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
உலகிலேயே சிறந்த படையினர் தாங்கள் தான் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர் என்றார் ஜிதேந்திர சிங்.
கலவரத்தில் ஒருவர் பலி: இதனிடையே, பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீநகரில் நூற்றுக்கணக்கானோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களைக் கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது, இளைஞர்கள் சிலர் போலீஸார் மீது கற்களை வீசினர். இதைத் தொடர்ந்து,
அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், 19 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.