டெஸ்ட்: இந்தியா படுதோல்வி! ஓ’கீஃப் 6 விக்கெட்டுகள்!

333 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.
டெஸ்ட்: இந்தியா படுதோல்வி! ஓ’கீஃப் 6 விக்கெட்டுகள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.

புணேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 94.5 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு சுருண்டது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று மார்ஷ் 31 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சிலும் வேட் 20 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள். ஆஸி. கேப்டன் ஸ்மித், 187 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். இந்தியாவில் அவர் எடுக்கும் முதல் சதம்.

இதன்பின்னர் 109 ரன்களில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஸ்மித். வழக்கம்போல அதிரடியாக ஆடி 3 சிக்ஸர்கள் அடித்த ஸ்டார்க், 30 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். பிறகு லயன் விக்கெட்டை உமேஷ் யாதவும் ஓ’கீஃப் விக்கெட்டை ஜடேஜாவும் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை மட்டும் இந்திய அணி சாதித்துவிட்டால் அது உலக சாதனையாக இருக்கும் என்கிற நிலை இருந்தது. 2003-ல் செயிண்ட் ஜான்ஸ்-ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே இன்றுவரை உலக சாதனையாக உள்ளது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாகவே இருந்தது. தொடக்க வீரர்களான விஜய் 2 ரன்களிலும் ராகுல் 10 ரன்களிலும் வீழ்ந்தார்கள். இதன்பிறகு இந்திய அணியின் சரிவைத் தடுக்கமுடியாமல் போனது. கோலி (13), ரஹானே (18), அஸ்வின் (8), சாஹா (5) ஆகியோர் தகுந்த இடைவெளிகளில் பெவிலியன் திரும்பினார்கள். இந்த இன்னிங்ஸிலும் ஓ’கீஃப் அற்புதமாகப் பந்துவீசி இந்திய அணியை நிலைகுலையச் செய்தார். அவருடைய சுழற்பந்துவீச்சுக்கு இந்திய அணியினரால் ஈடுகொடுக்கமுடியாதது எதிர்பாராத திருப்பம் என்றே சொல்லவேண்டும்.

2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 28.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து தடுமாறி வந்தது. புஜாரா 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னமும் 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்திய அணி இன்னமும் 341 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. அப்போதே 5 விக்கெட்டுகள் எடுத்து அசைக்கமுடியாத சக்தியாக விளங்கினார் ஓ’கீஃப். 

ஆனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியபோது முதல் ஓவரிலேயே புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஓ கீஃப். புஜாரா அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஒரே ஓவரில் ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் லயன். இதன்பிறகு கடைசி விக்கெட்டையும் லயன் வீழ்த்தி இந்திய அணியின் மோசமான பேட்டிங்குக்கு ஒரு முடிவு கொண்டுவந்தார்.

இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 33.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஓ’கீஃப் 6 விக்கெட்டுகளையும் லயன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com