ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா, நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா, நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சுவிட்சர்லாந்தின் இளம் வீராங்கனையான பெலின்டா பென்சிக்கை எதிர்கொண்டார்.


79 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் பென்சிக்கை செரீனா வெளியேற்றினார்.
ஓபன் எரா கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செரீனா, தற்போது 22 முறை பட்டம் வென்று, ஜெர்மனியின் முன்னாள் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்த முறை அவர் பட்டம் வென்றால், ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை முறியடிப்பதோடு, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 7 முறை மகுடம் சூடிய பெருமையையும் பெறுவார். இந்தப் போட்டியின்போது, செரீனாவின் வருங்கால கணவர் அலெக்ஸிஸ் ஒஹானியன் பார்வையாளர் அரங்கிலிருந்து செரீனாவை உற்சாகப்படுத்தினார்.
19 வயது வீராங்கனையான பெலின்டா பென்சிக், கடந்த 2015-இல் டொரண்டோ அரையிறுதியில் செரீனாவை வெளியேற்றியது நினைவு கூரத்தக்கது.
செரீனா, 2-ஆவது சுற்றில் செக் குடியரசின் லூசி சஃபரோவாவை எதிர்கொள்கிறார். சஃபரோவா, தனது முதல் சுற்றில் பெல்ஜியத்தின் யானினா விக்மேயரை 3-6, 7-6 (9/7), 6-1 என்ற செட் கணக்கில் வெளியேற்றினார்.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்திலுள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஸ்பெயினின் சாரா சாரிபெஸ்ஸை 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதேபோல் பிரிட்டனின் ஜோ கோன்டா, பெல்ஜியத்தின் கிரிஸ்டன் பிளிப்கென்ஸை 7-5, 6-2 என்ற நேர் செட்டில் சாய்த்தார்.
ஆடவர் பிரிவில், 14 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனும், தரவரிசையில் 9-ஆம் இடம் வகிப்பவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஜெர்மனியின் புளோரியன் மேயருடன் மோதினார்.
சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 49-ஆவது இடத்திலுள்ள மேயரை 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் நடால் வீழ்த்தினார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில், நடால், தனது சக நாட்டு வீரரான பெர்னான்டோ வெர்டாஸ்கோவிடம் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆனால், இந்த முறை, புளோரியன் மேயரை சிறப்பாக எதிர்கொண்டு, தனது 2-ஆவது சுற்றை உறுதி செய்தார். கடந்த 2009-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, நடால் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக இங்கு சாம்பியன் ஆகும் முனைப்பில் உள்ளார்.
கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டிக்குப் பின்னர், நடாலுக்கு இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க இயலாமல் போனது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்திலுள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் பெர்னான்டோ வெர்டாஸ்கோவை சந்தித்தார். 2 மணி நேரம் 20 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜோகோவிச், 6-1, 7-6 (7/4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-ஆவது இடத்திலுள்ள கனடாவின் மிலாஸ் ரயோனிச், ஜெர்மனியின் டஸ்டின் பிரௌனை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார்.
தரவரிசையில் 24-ஆவது இடத்திலுள்ள ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் வெரவ் தனது முதல் சுற்றில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸியை 6-2, 3-6, 5-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

கர்லோவிச் புதிய சாதனை
ஆடவர் ஒற்றையர் பிரிவில் குரோஷியாவின் இவோ கர்லோவிச் - ஹொராசியோ ஜெபல்லாஸ் (ஆர்ஜெண்டீனா) இடையிலான ஆட்டம் 5 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது.
ஆஸ்திரேலிய ஓபனில் நீண்ட நேரம் நீடித்த போட்டிகளில் இதுவும் ஒன்று. இந்த ஆட்டத்தின் முடிவில் 6-7 (6/8), 3-6, 7-5, 6-2, 22-20 என்ற செட் கணக்கில் இவோ கர்லோவிச் வாகை சூடினார்.
மேலும், இந்த ஆட்டத்தில் 75 ஏஸ் சர்வீஸ்களை வீசியும், 84 கேம்களை வென்றும் கர்லோவிச் புதிய உலக சாதனையையும் படைத்தார். 2005-இல் சுவீடனின் தாமஸ் ஜோஹன்சன் 51 ஏஸ் சர்வீஸ்களை வீசியதே ஆஸ்திரேலிய ஓபனில் முந்தைய சாதனையாக இருந்தது. மேலும், 2003-இல் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் 83 கேம்கள் வென்றிருந்தார். இந்த வகையில் கர்லோவிச் 84 கேம்களை வென்று முத்திரைப் பதித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com