கோலி தந்த நம்பிக்கையால் ஓய்வு முடிவை கைவிட்டேன்

"புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த சூழ்நிலையில் விராட் கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் அப்போதே நான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பேன்'
கோலி தந்த நம்பிக்கையால் ஓய்வு முடிவை கைவிட்டேன்

"புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த சூழ்நிலையில் விராட் கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் அப்போதே நான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பேன்' என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யுவராஜ் சிங், 2-ஆவது போட்டியில் 150 ரன்கள் விளாசினார். இது, யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகளில் எட்டியுள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அந்த ஆட்டத்தில் அவர் தனது 14-ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், யுவராஜ் சிங் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஒரு அணியில் இருக்கும்போது அதன் கேப்டன் மற்றும் சக வீரர்களின் ஆதரவு இருந்தால் தன்னம்பிக்கை தானாகவே பிறக்கும். அந்த வகையில் விராட் கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்தார். அது எனக்கு முக்கியமான ஒன்று. அதேபோல், சக வீரர்களும் என் மீது நம்பிக்கை வைத்தனர்.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தபோது தொடர்ந்து விளையாடுவதா, வேண்டாமா என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தை கடந்து வருவதற்கு அதிகம் பேர் உதவினர். இயல்பாகவே, எதையும் எளிதாக விட்டுக்கொடுக்காதது தான் எனது கொள்கை. எனவே, தொடர்ந்து கடுமையாக உழைத்தேன். காலம் மாறும் என அறிந்திருந்தேன்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் சதம் அடித்தது அற்புதமான உணர்வு. ஏனெனில் நான் சதமடித்து நீண்ட காலம் ஆகியுள்ளது. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பிறகு முதல் 2-3 ஆண்டுகள் மிகக் கடினமானதாக இருந்தது. எனது உடலை தகுதிப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இந்திய அணியில் எனக்கென நிரந்தர இடம் இல்லை.
அதையடுத்து உள்நாட்டுப் போட்டியில் சிறப்பாக ஆடினேன். தொடர்ந்து அவ்வாறே சிறப்பாக ஆட விரும்பினேன். யார் எதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள எப்போதுமே ஆர்வம் காட்டியதில்லை. செய்தித்தாள் படிப்பதோ, தொலைக்காட்சிகளை பார்ப்பதோ இல்லை.
எனது ஆட்டத்தை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தற்போதும் தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன். 150 ரன்கள் என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஸ்கோர். இதை எட்டுவதற்கு எனக்கு நீண்ட காலம் ஆகியுள்ளது. இனி வரும் ஆட்டங்களில் நிலைத்தன்மையுடன் ஆட விரும்புகிறேன்.
2-ஆவது ஒருநாள் போட்டியில், தோனியுடனான பார்ட்னர்ஷிப் இயல்பானதாக இருந்தது. அணியில் நாங்கள் இருவரும் மிக அனுபவம் வாய்ந்தவர்கள். முதலில் இருவரும் இணைந்து 25 ரன்கள் எடுக்கவே நினைத்தோம். ஆனால், அதிகமாக ஸ்கோர் செய்தோம். எங்களிடையே எப்போதும் அந்தத் தோழமை உணர்வு இருக்கும். எதிர்காலத்திலும் இந்த பார்ட்னர்ஷிப் இவ்வாறாகவே தொடரும் என்று நம்புகிறேன் என்று யுவராஜ் சிங் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com