காலிறுதியில் நடால், ரயோனிச், செரீனா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கனடாவின் மிலோஸ் ரயோனிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்
காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் நடால், செரீனா.
காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் நடால், செரீனா.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கனடாவின் மிலோஸ் ரயோனிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தையசுற்றில் நடால் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 6-3, 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் கேல் மான்பில்ஸை தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 9-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் நடால், அது குறித்துப் பேசுகையில், "சில ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு காலிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
2015 பிரெஞ்சு ஓபனுக்குப் பிறகு முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் நடால், அடுத்ததாக கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை சந்திக்கிறார்.
முன்னதாக ரயோனிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (6), 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகட்டை தோற்கடித்தார்.
நடாலும், ரயோனிச்சும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் நடால் 6 முறையும், ரயோனிச் 2 முறையும் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 2-6, 7-6 (2), 6-2, 6-1 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினையும், பெல்ஜியத்தின் டேவிட் கோபின் 5-7, 7-6 (4), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமையும் தோற்கடித்தனர்.
செரீனா வெற்றி: மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். செரீனா தனது காலிறுதியில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டாவை சந்திக்கிறார். முன்னதாக கோன்டா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எக்டெரினா மகரோவாவை வீழ்த்தினார்.
இதேபோல் குரோஷியாவின் லூசிச் பரோனி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியையும், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் டேரியா கேவ்ரில்லோவையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையர்: காலிறுதியில் பயஸ் ஜோடி
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மட் ரெய்ட்-கேஸி டெல்லாக்வா ஜோடியைத் தோற்கடித்தது.
54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 4 மற்றும் 6-ஆவது கேம்களில் எதிர் ஜோடியின் சர்வீஸை முறியடித்த பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி, அடுத்த செட்டில் 8-ஆவது கேமில் எதிர் ஜோடியின் சர்வீஸை முறியடித்து வெற்றி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com