அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை: 5-இல் தேர்வு முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு விளையாட்டு விடுதிகளில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு விளையாட்டு விடுதிகளில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதற்கான தேர்வு முகாம் வரும் 5-ஆம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறுகிறது. ஆடவர் பிரிவில் தடகளத்துக்கான தேர்வு முகாம் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்திலும், கூடைப்பந்து விளையாட்டுக்கான தேர்வு முகாம் சென்னை நேரு உள் விளையாட்டரங்கிலும் நடைபெறுகிறது. மேற்கண்ட இரு பிரிவுகளிலும் பங்கேற்க 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும்.
பாட்மிண்டன் விளையாட்டுக்கான தேர்வு முகாம் சென்னை நேரு பூங்காவில் நடைபெறுகிறது. இதற்கு 8, 9 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தகுதியுடையவர்கள். நீச்சலுக்கான தேர்வு முகாம் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 8, 9, 11 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தகுதியுடையவர்கள்.
மகளிர்: மகளிர் பிரிவில் தடகளம், டேக்வாண்டோவுக்கான தேர்வு முகாம் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கிலும், பாட்மிண்டனுக்கான தேர்வு முகாம் நேரு பூங்காவிலும் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளில் படிப்பவர்கள் தகுதியுடையவர்கள்.
கூடைப்பந்துக்கான தேர்வு முகாம் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதற்கு 7, 8, 11 ஆகிய வகுப்புகளில் பயில்பவர்கள் தகுதியுடையவர்கள். கால்பந்துக்கான தேர்வு முகாம் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 11-ஆம் வகுப்பு பயில்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஹாக்கி விளையாட்டுக்கான தேர்வு முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 8, 11 ஆகிய வகுப்புகளில் பயில்பவர்கள் தகுதியுடையவர்கள்.
நீச்சலுக்கான தேர்வு முகாம் சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் 8, 9 ஆகிய வகுப்புகளில் படிப்பவர்கள் பங்கேற்கலாம். வாலிபாலுக்கான தேர்வு முகாம் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 8, 9, 11 ஆகிய வகுப்புகளில் படிப்பவர்கள் தகுதியுடையவர்கள்.
தேர்வு முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in)  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற அசல் சான்றுகளுடன் வரும் 5-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேர்வு முகாம் நடைபெறும் இடங்களில் நேரில் ஆஜராக வேண்டும்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com