தலைமை பயிற்சியாளர் நியமனம்: இந்திய அணியிடம் கருத்து கேட்கிறது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நியமனம் தொடர்பாக கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினரிடம் கருத்து கேட்கும் நடவடிக்கையை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நியமனம் தொடர்பாக கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினரிடம் கருத்து கேட்கும் நடவடிக்கையை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பயிற்சியாளர் மற்றும் துணை ஊழியர்கள் நியமனம் தொடர்பாக இந்திய அணியினரிடம் விரிவாக கலந்தாலோசிக்க, பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி புதன்கிழமை ஜமைக்கா சென்றுள்ளார். முன்னதாக, பிசிசிஐ நிர்வாகக் குழுவின் (சிஓஏ) அனுமதி பெற்று அவர் அங்கு சென்றார். பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக கேப்டன் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தெரிவிக்கும் கருத்துகள், பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் (சிஏசி) தெரிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
புதிய பயிற்சியாளருடன் வீரர்களுக்கு எந்தவித முரண்பாடும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்டன் கோலி கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'எந்தவொரு விவகாரத்திலும் பிசிசிஐ கருத்து கேட்டால் மட்டுமே அதுதொடர்பாக பரிந்துரைகளை வழங்குவேன்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'வெங்கடேஷ் பிரசாத் போட்டியில் இல்லை': இதனிடையே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களில் வெங்கடேஷ் பிரசாத்தின் விண்ணப்பம் இல்லை. அவரும் தான் விண்ணப்பித்ததை உறுதிப்படுத்தவில்லை. அவர் தற்போது ஜூனியர் அணியின் தேர்வுக் குழு தலைவராக உள்ளார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com