ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா: கடைசி ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5- ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரை 3- 1 என்ற கணக்கில்
ஒருநாள் தொடரை வென்றதற்கான கோப்பையுடன் இந்திய அணியினர்.
ஒருநாள் தொடரை வென்றதற்கான கோப்பையுடன் இந்திய அணியினர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5- ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரை 3- 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்தது. மொத்தம் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது அந்த அணி. அடுத்து ஆடிய இந்தியா 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது.
முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளில் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக கைல் ஹோப் 46, கேப்டன் ஹோல்டர் 36, ரோவ்மேன் பாவெல் 31 ரன்கள் எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அல்ஜாரி ஜோசப் 3 ரன்களுடனும், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய தரப்பில் முகமது சமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஹார்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 206 ரன்களை இலக்காகக் கொண்டு களம் கண்ட இந்திய அணியில், தொடக்க வீரர் அஜிங்க்ய ரஹானே 51 பந்துகளுக்கு 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உடன் வந்த ஷிகர் தவன் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த கேப்டன் கோலி நிலைத்து ஆடி சதம் கடந்தார். அவருடன் இணைந்த தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்தியது. மொத்தம் 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது இந்தியா. கோலி 115 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 111 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 52 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள் என 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, கேப்டன் கோலி ஆட்டநாயகனாகவும், அஜிங்க்ய ரஹானே தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி
ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் எட்டிய சாதனையை, கேப்டன் விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் எதிரணியின் ஸ்கோரை சேஸ் செய்யும்போது சச்சின் 17 சதங்கள் அடித்துள்ளார். தற்போது விராட் கோலி அந்த வகையில் 18 சதங்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் 232 இன்னிங்ஸ்களில் எட்டிய இந்த சாதனையை, கோலி 102 இன்னிங்ஸ்களிலேயே எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com