தொடரை வென்று வரலாறு படைத்தது ஜிம்பாப்வே

இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஜிம்பாப்வே.
கோப்பையுடன் ஜிம்பாப்வே அணியினர்.
கோப்பையுடன் ஜிம்பாப்வே அணியினர்.

இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஜிம்பாப்வே.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது ஜிம்பாப்வே. இலங்கை மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று வரலாறு படைத்திருக்கிறது ஜிம்பாப்வே. கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் ஜிம்பாப்வே அணி வென்ற முதல் தொடர் இதுதான்.
இலங்கையின் அம்பணத்தோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி, ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் அந்த அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை தரப்பில் குணரத்னே ஆட்டமிழக்காமல் 59, குணதிலகா 52 ரன்கள் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்டுகளையும், கிரெமர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே வெற்றி: பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணியில் மஸகட்ஸா-சாலமோன் மிர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. சாலமோன் மிர் 32 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து வெளியேற, முஸகன்டா களம்புகுந்தார்.
மறுமுனையில் அசத்தலாக ஆடிய மஸகட்ஸா, ஜிம்பாப்வே 24 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் 86 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்தார்.
பின்னர் வந்த கிரேக் இர்வின், சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 ரன்களில் வெளியேற, முஸகன்டா 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு மால்கம் வாலர், பீட்டர் மூர் ஆகியோர் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, 34.4 ஓவர்களில் 175 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது ஜிம்பாப்வே. இதனால் இலங்கை வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த சிக்கந்தர் ராஸா-கேப்டன் கிரீம் கிரெமர் ஜோடி அசத்தலாக ஆட, 38.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஜிம்பாப்வே. சிக்கந்தர் ராஸா 27, கிரெமர் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் தனஞ்ஜயா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிக்கந்தர் ராஸா ஆட்டநாயகன் விருதையும், மஸகட்ஸா தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com