நேர்காணல் முடிந்தது; பயிற்சியாளர் அறிவிப்பு ஒத்திவைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் மும்பையில் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
செய்தியாளர்களிடம் பேசுகிறார் கங்குலி.
செய்தியாளர்களிடம் பேசுகிறார் கங்குலி.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் மும்பையில் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
ஆனால் பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளரை தேர்வு செய்ய சில நாள்கள் காலஅவகாசம் தேவைப்படுவதாக பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நேர்காணலை சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி நடத்தியது. சச்சின் லண்டனில் இருப்பதால் ஸ்கைப் மூலம் பங்கேற்றார். ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபஸ், லால்சந்த் ராஜ்புட் ஆகியோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இவர்களில் சேவாக் மட்டுமே நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டார்.
நேர்காணலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி கூறியதாவது: ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபஸ், லால்சந்த் ராஜ்புட் ஆகிய 5 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் பில் சிம்மன்ஸ் நேர்காணலில் தன்னால் பங்கேற்க இயலாது என தெரிவித்துவிட்டார். பயிற்சியாளரை இறுதி செய்ய எங்களுக்கு சில நாள்கள் காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்துள்ளோம். இலங்கை டெஸ்ட் தொடருக்கு ஓரளவு காலஅவகாசம் இருப்பதால், பயிற்சியாளரை அறிவிப்பதில் அவசரம் தேவையில்லை என கருதுகிறோம். புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் 2019 உலகக் கோப்பை போட்டி வரையில் அந்தப் பதவியில் இருப்பார். பயிற்சியாளர் விஷயத்தைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றார்.
கோலிக்கு கங்குலி அறிவுரை
கோலி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கங்குலி, 'பயிற்சியாளர் அணியை எப்படி இயக்குகிறார் என்பதை இந்திய கேப்டன் விராட் கோலி புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் பயிற்சியாளர் தேர்வு விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கியிருக்கும் விராட் கோலியை பாராட்டியாக வேண்டும். அவர், மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து நாடு திரும்பிய பிறகு அவரிடம் பயிற்சியாளர் விஷயம் குறித்து பேசவிருக்கிறோம். அதேநேரத்தில் இந்திய அணி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அதில் விராட் கோலி முக்கிய நபராக இருப்பார்' என்றார்.
புதிய பயிற்சியாளர் சேவாக்?


புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. சேவாக் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சேவாக்கிடம் இரண்டு மணி நேரம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. நேர்காணலை முடித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சேவாக், 'புதிய பயிற்சியாளர் யார் என்பதை விரைவில் தெரிந்து கொள்வீர்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com