இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி: பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகிர் கான் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி: பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகிர் கான் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜாகிர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிரிக்கெட் ஆலோசனைக் குழு பரிந்துரையின்படி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஜாகிர் கானையும் நியமிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் இருப்பார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய அணியின் மேலாளராக 2007- இல் பொறுப்பு வகித்த ரவி சாஸ்திரி, 2014 ஆகஸ்ட் முதல் 2016 ஜூன் வரையில் அணியின் இயக்குநர் பொறுப்பில் இருந்தார். தற்போது 2017 முதல் 2019 வரையிலான காலகட்டதிற்கு அணியின் பயிற்சியாளராக இருப்பார்.
முன்னதாக, பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி- வீரேந்திர சேவாக் இடையே கடும் போட்டி நிலவியதாகவும், இறுதியில் கோலியின் பலமான பரிந்துரையின் காரணமாகவே அந்தப் பதவி ரவி சாஸ்திரிக்கு வழங்கப்படதாகவும் கூறப்படுகிறது.
முதலில் மறுத்த பிசிசிஐ: முன்னதாக, 2019- ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை பகலில் வெளியான ஊடகத் தகவலை மறுத்த பிசிசிஐ, இரவில் அந்த நியமனத்தை உறுதி செய்தது.
கங்குலி, சச்சின், வி.வி.எஸ். லஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு, பயிற்சியாளர் பதவிக்கான நேர்க்காணலை திங்கள்கிழமை மேற்கொண்டது. இந்த நிலையில், பயிற்சியாளர் நியமன அறிவிப்பை செவ்வாய்க்கிழமை மாலை பிசிசிஐ வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் அறிவுறுத்தினார் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினரான கங்குலி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியிருந்ததாவது:
பயிற்சியாளர் நியமன விவகாரத்தில் கோலியின் முடிவை நாங்கள் மதிப்போம். பயிற்சியாளர் நியமன அறிவிப்பை செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட வாய்ப்பில்லை. அதற்கு இன்னும் எங்களுக்கு கால அவகாசம் வேண்டியுள்ளது. அதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயிடம் பேச உள்ளோம். இதுதொடர்பாக அவரிடம் பேசுவதற்காக செவ்வாய்க்கிழமை நண்பகலில் நான் தில்லி செல்வதாக இருந்தது. எனினும், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
நியமனம் தொடர்பாக கேப்டன் கோலியிடம் கருத்து கேட்க வேண்டியுள்ளது. அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை நிறைவு செய்துவிட்டு தற்போது விடுப்பில் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய இயலாது. அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடிந்தால், அதுகுறித்துப் பேசுவோம். பயிற்சியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கங்குலி கூறினார். இதனிடையே, கோலி தனது விடுப்பு முடிந்து வரும் 17- ஆம் தேதி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com