முர்ரே அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச் விலகல்: அரையிறுதியில் ஃபெடரர், பெர்டிச், சாம் கியூரி, சிலிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். போட்டித் தரவரிசையில்
முர்ரே அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச் விலகல்: அரையிறுதியில் ஃபெடரர், பெர்டிச், சாம் கியூரி, சிலிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். போட்டித் தரவரிசையில் 2- ஆவது இடத்தில் இருந்த ஜோகோவிச் காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார்.
அதேநேரத்தில் ரோஜர் ஃபெடரர், சாம் கியூரி, மரின் சிலிச், தாமஸ் பெர்டிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் சாம் கியூரி 3-6, 6-4, 6-7 (4), 6-1, 6-1 என்ற செட் கணக்கில் முர்ரேவை தோற்கடித்தார். 42- ஆவது கிராண்ட்ஸ்லாம் தொடரில் விளையாடி வரும் சாம் கியூரி, முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
2009-க்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சாம் கியூரி, முர்ரேவுக்கு எதிரான ஆட்டத்தில் 27 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். வெற்றி குறித்துப் பேசிய சாம் கியூரி, 'விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இது சிறப்புமிக்க வெற்றியாகும்' என்றார்.
சாம் கியூரி தனது அரையிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார். மரின் சிலிச் தனது காலிறுதியில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 3-6, 7-6 (6), 7-5, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லரைத் தோற்கடித்தார். இந்த ஆட்டம் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. ஜில்ஸ் முல்லர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடாலை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
11-ஆவது முறையாக விம்பிள்டனில் விளையாடி வரும் சிலிச், முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 2015 அமெரிக்க ஓபனுக்கு பிறகு முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் சிலிச்.
வெற்றி குறித்துப் பேசிய சிலிச், 'விம்பிள்டனில் 3 முறை காலிறுதியில் தோற்ற நிலையில், இப்போது அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது வியக்கத்தக்க சாதனையாகும்' என்றார்.
அரையிறுதியில் மோதவுள்ள சிலிச்சும், சாம் கியூரியும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவையனைத்திலும் சிலிச்சே வெற்றி கண்டுள்ளார். எனவே விம்பிள்டன் அரையிறுதியிலும் சிலிச் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அவர் வெல்லும்பட்சத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்.
ஃபெடரர் வெற்றி: மற்றொரு காலிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6- 4, 6- 2, 7- 6 (4) என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வீழ்த்தி விம்பிள்டனில் 12- ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் 'ஓபன் எராவில்' விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய 2- ஆவது மூத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஃபெடரர் தனது அரையிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார். பெர்டிச் தனது காலிறுதியில் 7- 6 (2), 2- 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது அவரை எதிர்த்து விளையாடிய செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
ஃபெடரரும், பெர்டிச்சும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் ஃபெடரர் 18 வெற்றிகளையும், பெர்டிச் 6 வெற்றிகளையும் பெற்றுள்ளனர். எனவே ஃபெடரர் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. ஜோகோவிச், முர்ரே, நடால் ஆகிய மூன்று முன்னணி வீரர்களும் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டதால், ரோஜர் ஃபெடரர் தனது 19- ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரையிறுதிக்கு முன்னேறியதும் ஆர்ப்பரிக்கும் சிலிச்.


ரயோனிச்சுக்கு எதிரான காலிறுதியில் ரோஜர் ஃபெடரர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com