சச்சின் கபடி அணியின் விளம்பரத் தூதர் - கமல்!

முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என கமல் கூறியுள்ளார்... 
சச்சின் கபடி அணியின் விளம்பரத் தூதர் - கமல்!

சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணியின் விளம்பர தூதராக கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் நீண்ட காலமாக விளையாடப்பட்டு வரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. இன்றைக்கும் ஏராளமான கிராமங்களில் இரவு நேரத்தில் மின்னொளியில் திருவிழா போன்று கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அது இப்போது தொழில்முறை (புரோ கபடி) விளையாட்டான பிறகு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு என ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்திருக்கிறது புரோ கபடி லீக் போட்டிகள். 

புரோ கபடியின் 5-ஆவது சீசனில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 4 அணிகள் முதல்முறையாக களமிறங்குகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் 12 அணிகளும் "ஏ' மற்றும் "பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக இந்த 12 அணிகளும் தங்களது பிரிவுக்குள்ளாக 15 ஆட்டங்களிலும், இதர பிரிவுடன் 7 ஆட்டங்களிலும் மோதவுள்ளன. மொத்தம் 13 வாரங்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இறுதிச் சுற்றுக்கு முன்பாக, 2 வெளியேற்று சுற்றுகளும் உள்ளன. ஏ பிரிவில் தபாங் டெல்லி, ஜெப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், யு மும்பா, ஹரியாணா ஸ்டீலர்ஸ், குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யுபி யோதாஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள்
 உள்ளன.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணியின் விளம்பர தூதராக கமல் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என கமல் கூறியுள்ளார். 

வரும் 28-ஆம் தேதி புரோ கபடி லீக் தொடங்குகிறது. ஹைதராபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸூம், தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று சென்னையில் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 5-ஆவது சீசன் புரோ கபடிப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ. 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.1.2 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதுதவிர மதிப்புமிக்க வீரர் விருதை வெல்பவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com