புணேவுக்கு இடம் மாறவுள்ள சென்னை ஓபன் போட்டி! ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்களையும் ஒரு காரணமாகக் கொண்டு சென்னை ஓபன் போட்டியை புணேவுக்கு...
புணேவுக்கு இடம் மாறவுள்ள சென்னை ஓபன் போட்டி! ரசிகர்கள் அதிர்ச்சி!

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் கடந்த 21 வருடங்களாக நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.3 கோடியே 39 லட்சம் ஆகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவருக்கு ரூ. 54 லட்சம் மற்றும் 250 ரேட்டிங் புள்ளிகளும், இறுதிச்சுற்றில் தோற்ற வீரருக்கு ரூ.28.5 லட்சம் மற்றும் 150 புள்ளிகளும் வழங்கப்பட்டன. 

சென்னை ஓபன் போட்டியை நடத்தும் ஐஎம்ஜி நிறுவனத்துடன் 3 வருடத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது தமிழக அரசு. ஒவ்வொரு வருடமும் போட்டி நடத்த தமிழக அரசு ரூ. 2 கோடி வழங்கிவருகிறது. ஆனால் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்களையும் ஒரு காரணமாகக் கொண்டு சென்னை ஓபன் போட்டியை புணேவுக்கு மாற்றியுள்ளது ஐஎம்ஜி. இது தொடர்பான ஒப்பந்தம் ஐஎம்ஜிக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் இடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சென்னை டென்னிஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகவலை மகாராஷ்டிராவின் பள்ளிக் கல்வியின் துணைச் செயலர் ராஜேந்திர பவார் கூறியதாவது: ஆமாம். சென்னை ஓபன் இனி புணேவில் நடைபெறவுள்ளது. இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னையில் நடைபெற்று வந்த சென்னை ஓபன் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. இனி இந்தப் போட்டி மகாராஷ்டிரா ஓபன் என அழைக்கப்படும்.  பிப்ரவரியில் புணே-வில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான டேவிஸ் கோப்பைப் போட்டி நடைபெற்றது. இதையடுத்து ஏடிபி தரத்திலான போட்டியை நடத்த மகாராஷ்டிர அரசு ஆர்வம் கொண்டது. இந்த நேரத்தில் சென்னை ஓபன் போட்டியை புணேவுக்கு மாற்றுகிற வாய்ப்பு வந்தபோது அதற்கு ஆதரவளிக்க மாநில அரசு முன்வந்தது. இப்போது புணே-வில் இப்போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஐஎம்ஜி நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

புணே இந்தப் போட்டியின் மூன்றாவது மையமாகும். 1996-ல் முதலில் தில்லியில் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு இந்த வருடம் வரை இப்போட்டி சென்னையில் நடைபெற்றது. அடுத்த வருடம் முதல், புணேவில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அதற்கு முன்பு சென்னை ஓபன் போட்டியில் பங்கேற்பார்கள். போட்டி நடைபெறும் இரு நகரங்களிலும் ஒரேமாதிரியான தட்பவெப்ப நிலை நிலவுவதால் சென்னை ஓபன் போட்டியில் பங்கேற்க முன்னணி வீரர்கள் ஆர்வம் செலுத்தினார்கள். நடால், மோயா, சிலிச், வாவ்ரிங்கா போன்ற பிரபல வீரர்கள் சமீபத்திய வருடங்களில் சென்னை ஓபன் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில் இந்தப் போட்டி சென்னையை விட்டு நகர்ந்துள்ளது, சென்னை டென்னிஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் பேரிழப்புதான். 

இதற்கு தமிழக அரசும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் என்ன பதில் அளிக்கப்போகின்றன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com