தமிழ் தலைவாஸ் கபடி அணி விழா: சச்சின், கமல் பங்கேற்பு!

புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
தமிழ் தலைவாஸ் கபடி அணி விழா: சச்சின், கமல் பங்கேற்பு!

புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், கமல் ஹாசன், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்டோரும் பங்கேற்றார்கள். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் கூறியதாவது: 

கபடி, தமிழகத்தில் தோன்றிய விளையாட்டிய என்கிற கூற்றும் உண்டு. நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விளையாடிய விளையாட்டு இது. தமிழ் தலைவாஸ் வெற்றி பெறவேண்டும். இறுதி ஆட்டம் விளையாட இங்கு வரவேண்டும் என்று கூறினார். 

சென்னை தலைவாஸ் கபடி அணியின் தூதராக நடிகர் கமல் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல் ஹாசன், 'கபடி விளையாட்டுடன் என்னை இணைத்துக் கொண்டிருப்பதை மிகப்பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எனது மூதாதையர் கண்டுபிடித்த கபடி விளையாட்டில் பங்கெடுப்பதில் பெருமை கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

புரோ கபடியின் 5-ஆவது சீசனில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 4 அணிகள் முதல்முறையாக களமிறங்குகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் 12 அணிகளும் "ஏ' மற்றும் "பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக இந்த 12 அணிகளும் தங்களது பிரிவுக்குள்ளாக 15 ஆட்டங்களிலும், இதர பிரிவுடன் 7 ஆட்டங்களிலும் மோதவுள்ளன. மொத்தம் 13 வாரங்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இறுதிச் சுற்றுக்கு முன்பாக, 2 வெளியேற்று சுற்றுகளும் உள்ளன. ஏ பிரிவில் தபாங் டெல்லி, ஜெப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், யு மும்பா, ஹரியாணா ஸ்டீலர்ஸ், குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யுபி யோதாஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் உள்ளன.

வரும் 28-ஆம் தேதி புரோ கபடி லீக் தொடங்குகிறது. ஹைதராபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸூம், தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று சென்னையில் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 5-ஆவது சீசன் புரோ கபடிப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ. 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.1.2 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதுதவிர மதிப்புமிக்க வீரர் விருதை வெல்பவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com