இந்தியா-இலங்கை பயிற்சி ஆட்டம்: கொழும்பில் இன்று தொடங்குகிறது

இந்தியா-இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்தியா-இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 26-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது. அதை முன்னிட்டு நடைபெறும் இந்த பயிற்சி ஆட்டம் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும்.
காயத்திலிருந்து மீண்டு டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ள ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு இது மிக முக்கியமான ஆட்டமாகும். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேட் செய்ய கேப்டன் கோலி வாய்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபரில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ரோஹித் சர்மா, அதன்பிறகு தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர் விளையாடவில்லை.
காயத்திலிருந்து மீண்ட பிறகு ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா, கடந்த மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார். எனினும் காயத்திலிருந்து மீண்ட பிறகு முதல் தர கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. எனவே அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள இந்த ஆட்டம் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடி, அதில் 6 அரை சதங்களை விளாசிய கே.எல்.ராகுல் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அதனால் ஐபிஎல், சாம்பியன்ஸ் டிராபி, மேற்கிந்தியத் தீவுகள் தொடர் ஆகியவற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் அவர், இந்த பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியமாகும்.
வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சமி, இஷாந்த் சர்மா ஆகியோரின் ஃபார்மை கேப்டன் கோலி அறிந்து கொள்வதற்கு இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும். இலங்கை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய மூவரையும் களமிறக்கி கேப்டன் கோலி சோதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com