சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புணேவுக்கு மாற்றம்: அடுத்த ஆண்டு முதல் மகாராஷ்டிர ஓபன்

தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புணேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புணேவுக்கு மாற்றம்: அடுத்த ஆண்டு முதல் மகாராஷ்டிர ஓபன்

தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புணேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் மகாராஷ்டிர ஓபன் என்ற பெயரில் ஏடிபி போட்டி நடைபெறும் என போட்டியை நடத்தும் உரிமையை பெற்றிருக்கும் நிறுவனமான ஐஎம்ஜி ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ஸ்பான்சர் கிடைக்காததன் காரணமாக அது புணேவுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் கூறியிருப்பதாவது: உலகத்தரம் வாய்ந்த ஏடிபி டென்னிஸ் போட்டியை எங்கள் மாநிலத்துக்கு வரவேற்கிறோம். மகாராஷ்டிர ஓபனை நடத்தவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் முன்னணி வீரர்களை அழைத்து வந்து விளையாட வைப்பதன் மூலம் மகாராஷ்டிர ஓபன் போட்டியை மிகப்பெரிய உயரத்துக்கு எடுத்துச் செல்வோம் என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஐஎம்ஜி ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது: சென்னை ஓபனை மிகப்பெரிய வெற்றியடைய செய்ததற்காக தமிழக ரசிகர்களுக்கும், தமிழக அரசுக்கும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மகாராஷ்டிர ஓபனின்போது புணே, மகாராஷ்டிரம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து டென்னிஸ் ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நாங்கள் மிகப்பெரிய டென்னிஸ் பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கிறோம். இளம் வீரர்களுக்கு தலைசிறந்த வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமின்றி, தரவரிசையில் ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி திடீரென மகாராஷ்டிரத்துக்கு மாற்றப்பட்டிருப்பது சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றாக அமைந்துள்ளது.
போட்டி மாற்றப்பட்டதை எதிர்த்து டிஎன்டிஏ வழக்கு?
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை 2019-ஆம் ஆண்டு வரை சென்னையில் நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த ஒப்பந்தத்தை ஐஎம்ஜி ரிலையன்ஸ் ரத்து செய்திருப்பதை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ) உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹிட்டேன் ஜோஷி கூறியதாவது: ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலே சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இங்கிருந்து மாற்றப்பட்டதற்கு காரணம். கடந்த ஜனவரியில் சென்னை ஓபன் போட்டி முடிந்த பிறகு ஏர்செல் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுவிட்டதால், ஏர்செல் இனி டைட்டில் ஸ்பான்சராக இருக்காது என ஐஎம்ஜி ரிலையன்ஸிடம் தெரிவித்தோம்.
2018 சீசனுக்கான டைட்டில் ஸ்பான்சரை தேடுகிறோம். 2019 வரை சென்னை ஓபன் போட்டியை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் அதை நிறைவேற்றுவதற்காக தமிழக அரசின் உதவியுடன் நிதி திரட்டுகிறோம் என ஐஎம்ஜி ரிலையன்ஸிடம் தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக எங்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக ஐஎம்ஜி ரிலையன்ஸ் எங்களுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக எங்களுடைய வழக்குரைஞரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் புணேவில் நடைபெறவுள்ள மஹாராஷ்டிர ஓபன் போட்டிக்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com