தமிழ்நாடு பிரீமியர் லீக் சென்னையில் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்-தூத்துக்குடி அணிகள் மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி (2-ஆவது சீசன்) சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது.
சென்னையில் வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர்.
சென்னையில் வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி (2-ஆவது சீசன்) சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான தூத்துக்குடி டியூட்டி பேட்ரியாட்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டியூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட், திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியார்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
தமிழகத்தின் முன்னணி வீரர்களான அஸ்வின் (திண்டுக்கல் டிராகன்ஸ்), தினேஷ் கார்த்திக், அபிநவ் முகுந்த (இருவரும் டியூட்டி பேட்ரியாட்ஸ்), முரளி விஜய் (லைக்கா கோவை கிங்ஸ்) ஆகியோர் இந்த சீசனில் விளையாடவில்லை. அஸ்வின், அபிநவ் முகுந்த் ஆகியோர் இலங்கைத் தொடரில் விளையாடி வருவதால், இதில் பங்கேற்கவில்லை. முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் காரணமாக பங்கேற்கவில்லை.
காரைக்குடி அணியில் 14 வயது ஆல்ரவுண்டரான நிவேதன் ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார். அவர் தனது 8-ஆவது வயதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 4-ஆவது டிவிஷன் லீகில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அவர் தலைசிறந்த பேட்ஸ்மேனும்கூட.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் விளையாட தகுதி பெறும். லீக் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதியோடு நிறைவடைகின்றன.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னையில் முதல் தகுதிச் சுற்றும், ஆகஸ்ட் 16-ஆம் தேதி திண்டுக்கல்லில் வெளியேற்றும் சுற்றும் (எலிமினேட்டர் சுற்று) நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 18-ஆம் தேதி திருநெல்வேலியில் 2-ஆவது தகுதிச்சுற்று நடைபெறுகிறது. ஆகஸ்ட் 20-இல் சென்னையில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
அனைத்து ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் விஜய் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
ரூ.3.4 கோடி பரிசு
இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.3.4 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், 5 முதல் 8-ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படவுள்ளன.
சிக்ஸர் திருவிழா
போட்டி தொடங்குவதற்கு முன்னர் சிக்ஸர் திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மேத்யூ ஹேடன், மோஹித் சர்மா, பத்ரிநாத், பவன் நெகி, தமிழக வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பெளலிங் இயந்திரம் மூலம் தலா ஒரு ஓவர் வீசப்படும். அதில் யார் அதிக சிக்ஸர் அடிக்கிறார்கள் என்பதே போட்டியாகும். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com