பயிற்சி ஆட்டம்: இலங்கை 187-க்கு ஆல்அவுட்; இந்தியா 135/3

இந்தியாவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி 187 ரன்களுக்கு சுருண்டது.
இலங்கையை ஆல் அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.
இலங்கையை ஆல் அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.

இந்தியாவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி 187 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணியில் கெளஷல் சில்வா 4 ரன்களில் நடையைக் கட்ட, 2-ஆவது விக்கெட்டுக்கு குணதிலகா-லஹிரு திரிமானி ஜோடி 130 ரன்கள் சேர்த்தது. திரிமானி 59 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கையின் சரிவு ஆரம்பமானது. பின்னர் வந்த டி சில்வா டக் அவுட்டாக, குணதிலகா 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு வந்தவர்களில் ரோஷன் சில்வா ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் விரைவாக வெளியேற, இலங்கை அணி 55.5 ஓவர்களில் 187 ரன்களுக்கு சுருண்டது. இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ராகுல் அரை சதம்: இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான அபிநவ் முகுந்த் டக் அவுட்டாக, பின்னர் வந்த சேதேஷ்வர் புஜாரா 12 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து கேப்டன் கோலி களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் அரை சதம் கண்டார். இந்தியா 23.1 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 58 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து விராட் கோலியுடன் இணைந்தார் அஜிங்க்ய ரஹானே. இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 34, ரஹானே 30 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 52 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com