டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியைத் தோற்கடித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி
அரை சதமடித்த மகிழ்ச்சியில் கோபிநாத்.
அரை சதமடித்த மகிழ்ச்சியில் கோபிநாத்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியைத் தோற்கடித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திருவள்ளூர் வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் டக் அவுட்டாக, பின்னர் வந்த கேப்டன் பாபா அபராஜித் 13 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதையடுத்து மலோலன் ரங்கராஜன் களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய சதுர்வேதி 22 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு வந்த சித்தார்த், சஞ்சய் யாதவ் ஆகியோர் டக் அவுட்டாக, பின்னர் வந்த விக்கெட் கீப்பர் ராஜன் 14 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் நிதானமாக ஆடிய ரங்கராஜன் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கடைசிக் கட்டத்தில் அபிஷேக் தன்வார் அதிரடியாக ஆட, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது திருவள்ளூர் வீரன்ஸ். அபிஷேக் தன்வார் 17 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 25, ராஹில் ஷா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் கேப்டன் ராஜகோபால் சதீஷ் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சூப்பர் கில்லீஸ் வெற்றி: பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான தலைவன் சற்குணம் 1 ரன்களில் நடையைக் கட்ட, கோபிநாத்துடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் கார்த்திக். இந்த ஜோடி அசத்தலாக ஆட, சூப்பர் கில்லீஸின் வெற்றி எளிதானது. கார்த்திக் 35 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்தவர்களில் சரவணன் 18, கேப்டன் ராஜகோபால் சதீஷ் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோதும், மறுமுனையில் கோபிநாத் அசத்தலாக ஆட, சூப்பர் கில்லீஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கோபிநாத் 55 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54, சசிதேவ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்றைய ஆட்டம்
மதுரை-திண்டுக்கல்
இடம்: திண்டுக்கல்
நேரம்: இரவு 7.15
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com