விராட் கோலி நிறுவன விழாவில் பங்கேற்ற விஜய் மல்லையா: வந்தாச்சு அடுத்த சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி நடத்தும் தொண்டு நிறுவனம் தொடர்பாக லண்டனில் நடந்த விழா ஒன்றில்,  சர்ச்சைக்குரிய தொழில் அதிபர்  விஜய்  மல்லையா பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி நிறுவன விழாவில் பங்கேற்ற விஜய் மல்லையா: வந்தாச்சு அடுத்த சர்ச்சை!

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி நடத்தும் தொண்டு நிறுவனம் தொடர்பாக லண்டனில் நடந்த விழா ஒன்றில்,  சர்ச்சைக்குரிய தொழில் அதிபர்  விஜய்  மல்லையா பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்குள்ள பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு, திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். இங்கு வழக்குகளில் ஆஜராகக் கோரி, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ சார்பில் சம்மன்கள் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. ஆனால் அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையிலும் தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியின்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை விஜய் மல்லையா நேரில் சென்று பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது

இந்த நிலையில் இந்திய  கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி நடத்தி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில், லண்டனில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே கலந்து கொண்டிருந்தனர். சற்றும் எதிர்பாராத விதமாக விஜய் மல்லையா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

திடீரென்று அவரைக் கண்ட இந்திய அணி வீரர்கள் விஜய் மல்லையாவை கவனமாக தவிர்த்தனர். தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவே அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிவிக்கபட்டது.

இது தொடர்பான தகவல்கள் வெளியானதும், 'விராட் கோலி சார்பாகவோ அல்லது விராட் கோலியின் தொண்டு நிறுவனம் சார்பிலோ, விஜய் மல்லையாவுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை' என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியது. ஆனால் நிதிவசூலிப்பின் பொருட்டு நடத்தபடும் இது போன்ற ”நிதி விருந்து" நிகழ்ச்சிகளில், அதிக விலையை டேபிள்களுக்கு செலுத்துபவர்களுக்கு, விருந்தினர்களை அழைக்கும் உரிமை உள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வகையில் வேறு யாரோ ஒருவர் விஜய் மல்லையாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தியாவின் பிரபல ட்வென்டி 20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டிகளில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவராகத்தான் விராட் கோலி செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com