எப்படிப் போட்டாலும் அடித்த சேவாக்: நொந்துபோன அஸ்வின் கண்டுபிடித்த புதிய உத்தி!

ஆஃப் ஸ்பின்னர்களை நான் பந்துவீச்சாளர்களாகவே கருதுவதில்லை. அவர்கள் என்னை...
எப்படிப் போட்டாலும் அடித்த சேவாக்: நொந்துபோன அஸ்வின் கண்டுபிடித்த புதிய உத்தி!

ஆடுகளத்துக்குப் பின்னால் நடக்கும் சம்பவங்கள் எப்போதும் சுவாரசியமானவை. அப்படிப்பட்ட சுவாரசியச் சம்பவங்களை வெளிப்படுத்தியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சேவாக்குடனான உரையாடல்களை மிகவும் சுவாரசியமான முறையில் அஸ்வின் கூறியதாவது:

டம்புல்லா வலைப்பயிற்சியின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. சேவாக்குக்கு நான் பந்துவீசினேன். முதலில் அவுட்சைட் ஆஃப்-பில் வீசினேன். கட் செய்து பவுண்டரி அடித்தார். அடுத்தப் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வீசினேன். அதையும் கட் செய்து பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு நடு ஸ்டம்புக்கு வீசினேன். அதையும் கட் செய்தார். லெக் ஸ்டம்பில் வீசினால் அதையும் கட் செய்து பவுண்டரி அடித்தார். ஃபுல்லர் பந்தை வீசினேன். ஏறி வந்து சிக்ஸ் அடித்தார்.

இதனால் நான் கவலை கொண்டேன். ஒன்று நான் திறமையில்லாதவனாக இருக்க வேண்டும். அல்லது இவர் அதீத திறமை கொண்டவராக இருக்கவேண்டும். சச்சினுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசும்போதுகூட இந்தளவுக்குத் தடுமாறவில்லை. சிலநாள்கள் அவர் ஆடுவதைக் கவனித்து நேரடியாக சேவாக்கிடம் கேட்டேன். 

நான் முன்னேற என்ன செய்யவேண்டும். இப்படி சச்சினிடம் கேட்டால் அவர் சில ஆலோசனைகள் சொல்வார். தோனியிடம் கேட்டால் அவரும் ஒரு கண்ணோட்டத்தில் விளக்கம் சொல்வார். நான் செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்டேன். 

சேவாக் அளித்த பதில் - உனக்குத் தெரியுமா, ஆஃப் ஸ்பின்னர்களை நான் பந்துவீச்சாளர்களாகவே கருதுவதில்லை. அவர்கள் என்னைத் தடுமாறச் செய்யவே மாட்டார்கள். அவர்களின் பந்தில் சுலபமாக ரன்கள் குவிப்பேன். ஆஃப் ஸ்பின்னை ஆஃப் சைடிலும் இடைக்கை சுழற்பந்துவீச்சாளர்களின் பந்தை லெக் சைடிலும் அடிப்பேன் என்றார்.

அப்படியா என்று அடுத்த நாள் வேறு மாதிரி முயற்சி செய்து பந்துவீசினேன். அதையும் சேவாக் அடித்தார். ஒரு பத்து வயது சிறுவன் எனக்குப் பந்துவீசினால் எப்படிச் சாத்துவேனோ அப்படி என் பந்துவீச்சை எதிர்கொண்டார். 

பிறகு ஹர்பஜனுடன் ஆடிய அனுபவத்தைக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு அந்த க்ளூ கிடைத்தது.

அவருடைய ஈகோவுக்கு எதிராகப் பந்துவீசவேண்டும் என்பதைக் கண்டுபிடித்தேன். ஹர்பஜன் சிங்குடன் விளையாடிய ரோஹ்டக் போட்டியில் சேவாக் காய்ச்சலால் அவதிப்பட்டார். அந்தப் போட்டியில் ஹர்பஜனின் பந்துவீச்சில் 12 சிக்ஸ்கள் அடித்துள்ளார்.

ஹர்பஜன் நல்ல சுழற்பந்துவீச்சாளர்தானே என்று கேட்டேன்.

ஆமாம் என்றார். 

எனில் எப்படி 12 சிக்ஸர்கள் அடித்தீர்கள். அதன் பின்னணி என்ன என்று கேட்டேன்.

அதாவது சேவாக் தொடக்க வீரராக ஆடி 2 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆனால் பிறகு காய்ச்சலினால் ஆட்டத்திலிருந்து வெளியேறி கடைசியாக ஆடவந்தவர் 10 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இத்தனைக்கும் அது சுழற்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான ஆடுகளம். 

சார், எப்படிச் சாத்தியம் என்று கேட்டேன்.

அதற்கு சேவாக் சொன்ன பதில் - ஹர்பஜன் வீசிய ஒவ்வொரு பந்தும் நன்கு சுழன்றன. எனவே அவற்றை லெக் சைடில் அடிக்க முயன்றேன். 

ஆமாம். ஹர்பஜன் வீசிய எவ்வகையான பந்துவீச்சையும் லெக் சைடில் திருப்பி சிக்ஸ் அடித்துள்ளார். எனவே சேவாக்கைப் பொறுத்தவரை இதுதான் - பந்து சுழன்றால் சிக்ஸ் அடிப்பார். நல்ல பந்துகளை ஒரு கை பார்ப்பார். எனவே சேவாக்குக்குப் பந்துவீச ஒரே வழி - மோசமான பந்துகளை அவருக்கு வீசவேண்டும். இப்படி முயற்சி செய்தபோது அது சாதகமாகவே அமைந்தது.  

சேவாக்குக்கு எதிரான திட்டம் என்றால் இதுதான். மோசமான பந்துகளை அவருக்கு வீசியதன் மூலம் பலன் கிடைத்தது. ஐபிஎல்-களில் சிலசமயங்களில் சேவாக்குக்கு இதுபோல பந்துவீசி அவருடைய விக்கெட்டுகளை எடுத்தேன். ஏனெனில் அவர் எதிர்பார்ப்பதை நீங்களும் பந்துவீசக்கூடாது. அவர் நம்மிடம் சிறந்த பந்துகளையே எதிர்பார்க்கிறார். அதற்கு நேர்மாறாக மோசமான பந்துவீசியபோது அவருடைய விக்கெட்டுகளை எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com