திருப்பிச் செலுத்தாத கடன் தொகையை ஐபிஎல்-லில் செலவு செய்யவில்லை: மல்லையா பதில்

இந்திய அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில்தான் பிரிட்டனில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளுக்கு...
திருப்பிச் செலுத்தாத கடன் தொகையை ஐபிஎல்-லில் செலவு செய்யவில்லை: மல்லையா பதில்

திருப்பிச் செலுத்தாத கடன் தொகையை ஐபிஎல்-லில் செலவு செய்யவில்லை என்று மல்லையா பதில் அளித்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளி என்று இந்தியா ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 18-இல், ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் சரணடைந்த மல்லையா, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை நீதிமன்றத்திடம் அளித்துவிட வேண்டுமென்று மல்லையாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் மல்லையா நேரில் ஆஜரானார். அவர் சார்பில் மீண்டும் ஜாமீன் கோரப்பட்டது. இதையடுத்து, அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் மல்லையா கூறியதாவது:

என் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுக்கிறேன். நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்ப வேண்டுமென்று நினைக்கவில்லை. நீதிமன்றத்தில் எனது தரப்பு நியாயத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் எதைக் கூறினாலும், அதனை திரித்து வெளியிடுவதை ஊடகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. எனவேதான், ஊடகங்களிடம் நான் எதையும் கூறுவது இல்லை. என்னிடம் உள்ள ஆதாரங்கள் நீதிமன்றத்தில் பேசும்.

இந்திய அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில்தான் பிரிட்டனில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளுக்குச் சென்றேன். ஆனால், அதையும் ஊடகங்கள் மோசமான செய்தியாக வெளியிடுகின்றன.

வங்கிகளில் திருப்பிச் செலுத்தாத கடன் தொகையை ஐபிஎல்-லில் செலவு செய்யவில்லை. இதுகுறித்த ஆதாரம் எதுவுமின்றி கேள்வி கேட்கவேண்டாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com