இறுதிச் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 4-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சதமடித்த மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா.
சதமடித்த மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 4-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 129 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 123 ரன்களும், கேப்டன் விராட் கோலி 78 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 96 ரன்களும் குவித்து வெற்றி தேடித்தந்தனர்.
எக்பாஸ்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி முதல் ஓவரிலேயே செளம்ய சர்க்காரின் விக்கெட்டை இழந்தது. அவர் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து தமிம் இக்பாலுடன் இணைந்தார் சபீர் ரஹ்மான். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. சபீர் ரஹ்மான் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார். இதனால் 6.5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.
தமிம் இக்பால் 70: இதன்பிறகு தமிம் இக்பாலுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம். அவர், வந்த வேகத்தில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, ஆட்டம் சூடுபிடித்தது. இந்த ஜோடி அசத்தலாக ஆட, வங்கதேசம் சரிவிலிருந்து மீண்டது. இதனால் வங்கதேசம், 19-ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது. அதே ஓவரில் தமிம் இக்பால் பவுண்டரியை (ஜடேஜா பந்துவீச்சில்) விளாசி, 62 பந்துகளில் அரை சதம் கண்டார்.
அவரைத் தொடர்ந்து முஷ்பிகுர் ரஹிம் 61 பந்துகளில் அரை சதமடிக்க, 26.2 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது வங்கதேசம். இந்த ஜோடியைப் பிரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்த இந்திய கேப்டன் கோலி, கடைசியில் பகுதிநேர பந்துவீச்சாளரான கேதார் ஜாதவைப் பயன்படுத்தி தமிம் இக்பாலை வீழ்த்தினார். அவர் 82 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து போல்டு ஆனார். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தது.
முஷ்பிகுர் ரஹிம் 61: இதையடுத்து களம்புகுந்த ஷகிப் அல்ஹசன் 15 ரன்களில் ஆட்டமிழக்க, முஷ்பிகுர் ரஹிம் 85 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சேர்த்த நிலையில் கேதார் ஜாதவ் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு மொஸாதீக் ஹுசைன் 15, மகமதுல்லா 21 ரன்களில் வெளியேறினர். கடைசிக் கட்டத்தில் மோர்ட்டஸா அதிரடியாக ஆட, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது வங்கதேசம்.
மோர்ட்டஸா 25 பந்துகளில் 30, தஸ்கின் அஹமது 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, கேதார் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
ரோஹித் சதம்: பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக பவுண்டரிகளை விரட்ட, 10 ஓவர்களில் 63 ரன்களை எட்டியது இந்தியா.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஷிகர் தவன், 4 ரன்களில் அரை சதத்தை நழுவவிட்டார். அவர் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.4 ஓவர்களில் 87 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்க, அல்ஹசன் வீசிய 16-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாசி 57 பந்துகளில் அரை சதம் கண்டார் ரோஹித் சர்மா. இதனால் 17-ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது இந்தியா.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அசத்தலாக ஆட, 23 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து அதிரடியாக ஆடிய கோலி, தஸ்கின் அஹமது பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி, 42 பந்துகளில் அரை சதம் கண்டார்.
இதன்பிறகு முஸ்தாபிஜுர் ரஹ்மான் வீசிய 33-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசி 111 பந்துகளில் சதம் கண்டார் ரோஹித் சர்மா. இது ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 11-ஆவது சதமாகும். இதன்பிறகு கோலி வெளுத்து வாங்க, இந்தியாவின் வெற்றி எளிதானது. தொடர்ந்து வேகம் காட்டிய கோலி, சபீர் ரஹ்மான் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி ஆட்டத்தை முடித்தார். இறுதியில் இந்தியா 40.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. ரோஹித் சர்மா 123, கோலி 96 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் மோர்ட்டஸா ஒரு விக்கெட் எடுத்தார். ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com