வங்கதேச டெஸ்ட் தொடர்: ஆஸி. அணியில் ஸ்டார்க் விலகல்; ஓ'கீஃப் நீக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது
வங்கதேச டெஸ்ட் தொடர்: ஆஸி. அணியில் ஸ்டார்க் விலகல்; ஓ'கீஃப் நீக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அதேநேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீபன் ஓ'கீஃப் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக 2-ஆவது சுழற்பந்து வீச்சாளராக ஆஷ்டன் அகர் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது மிட்செல் ஸ்டார்க்கும், ஸ்டீபன் ஓ'கீஃபும்தான் சிறப்பாக பந்துவீசினார்கள்.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஓ'கீஃப் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். எனினும் அவருக்கு வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஓ'கீஃப், தேவையற்ற கருத்துகளை தெரிவித்ததால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது. அதுதான் வங்கதேசத் தொடரில் அவருடைய நீக்கத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி ஆகஸ்ட் 18-ஆம் தேதி வங்கதேசம் சென்றடைகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 27-ஆம் தேதி டாக்காவிலும், 2-ஆவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 4-ஆம் தேதி சிட்டகாங்கிலும் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி 2015-ஆம் ஆண்டு நடைபெற வேண்டியது. ஆனால் அப்போது வங்கதேசத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதாகவும், அதனால் அங்கு செல்ல வேண்டாம் எனவும் ஆஸ்திரேலிய அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்துஅந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது அங்கு நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்டில் அங்கு சென்று விளையாடவுள்ளது ஆஸ்திரேலியா. வங்கதேச மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது ஆஸ்திரேலியா.
அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், மட் ரென்ஷா, உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மேக்ஸ்வெல்,
ஹில்டன் கார்ட்ரைட், மேத்யூ வேட்,
பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பட்டின்சன், ஜோஷ் ஹேஸில்வுட், நாதன் லயன், ஆஷ்டன் அகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com