சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை பதற வைத்த ஃபகார் ஸமான்: சில சுவாரசிய முன்குறிப்புகள்!

லண்டனின் ஒவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை பதற வைத்த ஃபகார் ஸமான்: சில சுவாரசிய முன்குறிப்புகள்!

லண்டன்: லண்டனின் ஒவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் அதிரடி சதம் அடித்த ஃபகார் ஸமான் ஆட்ட நாயகனாகவும் தேர்தெடுக்கப்பட்டார். யார் இந்த ஃபகார் ஸமான் என்று  சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ளது மர்தான் நகரம். இங்குள்ள கட்லாங் பகுதியில் பக்கிர் குல் என்பவரின் மகனாக 10.04.1990 அன்று பிறந்தவர் ஃபகார் ஸமான். பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனான யூனிஸ்கான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சிறுவயதிலிருந்து ஸமான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் அதனை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துமாறு அவரது பெற்றோரால் எச்சரிக்கப்பட்டவர்.

இருந்த போதிலும் பெற்றோர் விருப்பத்தின்படி படிப்பில் கவனம் செலுத்தியவர், 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கப்பல்படையில் சேர்ந்தார். ஆறு ஆண்டு காலம் அங்கு பணிபுரிந்தாலும், கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தை விட்டுவிடாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டி வந்தார்.    

அதில் வெற்றி பெற்றவராக , கடந்த 27.02.2012 அன்று 'முல்தான் டைகர்ஸ்' என்னும் உள்ளூர் அணிக்காக 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் விளையாடத் துவங்கினார். இவர் ஒரு இடதுகை சுழற்பந்துவீச்சாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும், தொடர்ந்து வேலை மற்றும் விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார்  

ஆனால் ஒரு கட்டத்தில் கிரிக்கெட் தான் முக்கியம் என்று முடிவெடுத்தவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். அப்பொழுதுதான் அவர் தனது மாகாணத்தைச் சேர்ந்தவரும், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனுமான யூனிஸ்கானைச் சந்தித்தார். அவரது வாழ்வில் திருப்பு முனையான தருணம் அது..!

அதுவரை ஃபகார் ஸமான் 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் அணிகளில் எல்லாம் விளையாடி வந்தார். ஆனால் யூனிஸ்கான் அவரிடம் உனது சொந்த மாகாணத்திற்காக விளையாடுவதுதான் உனக்கு நல்லது என்று அறிவுறுத்தினார். அதன்படி மர்தான் திரும்பிய ஸமான், மாகாணங்களுக்கு இடையேயான போட்டித் தொடர்களில், தனது கைபர் பக்துன்குவா மாகாணத்திற்கு விளையாடினார்.    

பின்னர் அதில் இருந்து முன்னேறி, 19.04.2013 அன்று முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத்  துவங்கினார். குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடும் பொழுது எல்லாம், இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்வது ஸமானுக்கு பிடித்தமான பொழுது போக்கு. நேற்றைய இறுதி போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சினை அவர் துவம்சம் செய்ததை, நீங்கள் இப்பொழுது நினைவு கூறலாம்.

இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் ட்வெண்ட்டி 20 தொடரில், 'லாகூர் கலந்தர்ஸ்'அணிக்காக ஸமான் விளையாடினார். அதில் அவரது கேப்டனாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ப்ரண்டன் மெக்குலம் இருந்தார். அப்பொழுது ஸமானின் ஆட்டத் திறமையை பார்த்து வியர்ந்த மெக்குலம், 'நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தினை  இது போலவே வெளிப்படுத்தினால், உனக்கு எல்லா போட்டிகளிலும் வாய்ப்புத் தருகிறேன்' என்று உறுதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியே தொடர்ந்து முன்னேறியவர், 30.03.2017 அன்று மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற ட்வெண்ட்டி 20 போட்டியில் பாகிஸ்தானுக்காக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவரது ஆட்டத்திறன் தேர்வாளர்களின் கவனத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டார்.

இம்மாதம் 7-ஆம் தேதி பிர்மிங்ஹாமில் தென் ஆப்பிரிக்காவுக்குஎதிரான போட்டியில் ஸமான் முதன்முதலாக களமிறங்கினார்.  முதல்போட்டியில் 31 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் அரை சதம் எடுத்தார். அவரது ஸ்கோர்கள் முறையே  50 மற்றும் 57 ஆகும். 

தனது முழுமையான திறனை வெளிப்படுத்த அவர் தேர்வு செய்தது இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியைத்தான். தான் பங்கேற்கும் அறிமுகத் தொடர், கிரிக்கெட் போட்டிகளில் நிலவும் பரம வைரிகளுக்கிடையேயான போட்டிகளின் தாய் என்று அழைக்கப்படும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் என உச்சகட்ட அழுத்தத்தினை தரக் கூடிய ஒரு சூழ்நிலை.

இத்தனை விஷயங்கள் இருந்த போதிலும், ஆரம்ப கட்டத்தில் பும்ராவின் 'நோ பால்' ஒன்றில் ஆட்டமிழந்து கொஞ்சம் பதற்றமாக இருந்த நெருக்கடியிலும் மனம் தளராமல், இந்திய பந்துவீச்சாளர்களை சிதறடித்த ஸமான்  106 பந்துகளில் 114 ரன்களை குவித்தார்.

அவரது இந்த அருமையான ஆட்டத்திற்கு பரிசாக இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இந்திய பாகிஸ்தான் ரசிகர்களால் நெடு நாட்களுக்கு மறக்க முடியாத ஒரு ஆட்டமாக மாறி விட்ட நேற்றைய போட்டி, பாகிஸ்தான் அணிக்கு ஒரு புதிய பேட்டிங் நட்சத்திரத்தை கொடுத்திருக்கிறது என்றே நாம் உறுதியாக சொல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com