பாண்டியாவை ரன் அவுட் செய்த ஜடேஜா! ரசிகர்கள் கொந்தளிப்பு!

பாண்டியாவை தேவையில்லாமல் ரன் அவுட்டாக்கினார் ஜடேஜா. இதனால் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்த பாண்டியா ஏமாற்றத்தோடு வெளியேறினார்.
பாண்டியாவை ரன் அவுட் செய்த ஜடேஜா! ரசிகர்கள் கொந்தளிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிவந்த ஹார்திக் பாண்டியாவை ரன் அவுட் செய்த ஜடேஜாவுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. 

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. இந்திய அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. முகமது ஆமிர் வீசிய முதல் ஓவரின் 3-ஆவது பந்தில் ரோஹித் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் கோலி 5 ரன்கள் சேர்த்த நிலையில் ஆமிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போதே இந்தியாவின் தோல்வி உறுதியாகிவிட்டது.

இந்தியா 54 ரன்களை எட்டியபோது யுவராஜ் சிங் 22 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி 4 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்க, மறுமுனையில் நின்ற கேதார் ஜாதவ் 9 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்க, மறுமுனையில் பாண்டியா வெளுத்து வாங்கினார். ஷதாப் கான் வீசிய 23-ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பாண்டியா, 32 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் ஆட்டத்தில் பாண்டியா திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்கிற நம்பிக்கையை இந்திய ரசிகர்கள் பெற்றார்கள். 

தொடர்ந்து வேகம் காட்டிய அவர், ஃபகார் ஸமான் பந்துவீச்சில் 2 சிக்ஸர்களை விளாச, 26 ஓவர்களில் 152 ரன்களை எட்டியது இந்தியா. ஆனால் ஹசன் அலி வீசிய அடுத்த ஓவரில் பாண்டியாவை தேவையில்லாமல் ரன் அவுட்டாக்கினார் ஜடேஜா. இதனால் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்த பாண்டியா ஏமாற்றத்தோடு வெளியேறினார்.

இதன்பிறகு ஜடேஜா 15 ரன்களில் வெளியேற, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.

நம்பிக்கையளிக்கும் விதத்தில் மட்டுமல்லாமல் அதிரடியாகவும் விளையாடி வந்த பாண்டியாவை ஜடேஜா ரன் அவுட் செய்துவிட்டார் என்று சமூகவலைத்தளத்தில் ஜடேஜாவுக்கு எதிராக ரசிகர்கள் பொங்கினார்கள். ரன்னைத் தவறுதலாகக் கணித்து ஓடியதோடு மட்டுமல்லாமல் ஜடேஜாவும் ஓட ஆரம்பித்ததால் நிச்சயம் சிங்கிள் எடுத்துவிடமுடியும் என்கிற எண்ணத்தில் மறுமுனையில் ஓடினார் பாண்டியா. ஆனால் தவறான கணிப்பு என்று பாதியில் புரிந்துகொண்ட ஜடேஜா, உடனே பின்வாங்கி மீண்டும் தன் கிரிஸுக்குச் சென்றார். இத்தனைக்கும் ஜடேஜா தன் பக்கம் வேகமாக வந்துகொண்டிருப்பது அவருக்கு நன்குத் தெரியும். 

அந்தச் சமயத்தில் ஜடேஜா சுதாரித்து, நன்கு ஆடிவந்த பாண்டியாவுக்காக தன் விக்கெட்டை விட்டுக்கொடுத்திருக்கலாம். ஆனால் வேகவேகமாக கிரிஸில் தன் பேட்டை வைப்பதிலேயே ஆர்வம் கொண்டார். இதனால் பாண்டியா துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆக நேர்ந்தது. 

இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பாண்டியா ஆடுகளத்திலேயே ஜடேஜாவைக் கடிந்துகொண்டார். மிக ஆக்ரோஷமாக களத்தை விட்டு வெறியேறினார். பவுண்டரியின் அருகே இருந்த விளம்பர அட்டைகளைத் தனது பேட்டால் வேகமாகத் தள்ளினார். ஓய்வறையில் அவர் எதையாவது உடைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதையடுத்து சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சீற்றத்தைக் காணமுடிந்தது. ஜடேஜா சுயநலத்துடன் நடந்துகொண்டார் என்று ரசிகர்கள் அவரை விதவிதமாக வசைபாடினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com