இந்தோனேசிய ஓபன்: ஸ்ரீகாந்த் சாம்பியன்

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். சூப்பர் சீரிஸ் போட்டியில் ஸ்ரீகாந்த் வென்ற 3-ஆவது பட்டம் இது.
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஸ்ரீகாந்த்.
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஸ்ரீகாந்த்.

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். சூப்பர் சீரிஸ் போட்டியில் ஸ்ரீகாந்த் வென்ற 3-ஆவது பட்டம் இது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-11, 21-19 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கஜுமாஸா சகாயை தோற்கடித்தார்.
வெற்றி குறித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது: கஜுமாஸா சிறப்பாக ஆடினார். குறிப்பாக 2-ஆவது செட்டில் அவருடைய ஆட்டம் சிறப்பாக இருந்தது. அந்த செட்டில் ஒரு கட்டத்தில் 6-11 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த நான், பின்னர் சரிவிலிருந்து மீண்டதோடு, 13-13 என்ற கணக்கில் சமநிலையை எட்டினேன். அதுவே எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
என்னுடைய பயிற்சியாளர் முல்யோ ஹன்டாயோவின் பயிற்சியால் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபனில் இறுதிச் சுற்று வரை முன்னேறினேன். இப்போது இந்தோனேசிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறேன். அதனால் எனது பயிற்சியாளருக்கு எனது இதயத்தில் முக்கியம் இடம் உண்டு. ஒரு வாரமாக எனக்கு மிகப்பெரிய ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.
பிரதமர் வாழ்த்து!
இந்தோனேசிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
வாழ்த்துகள் ஸ்ரீகாந்த். இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் நீங்கள் பெற்ற வெற்றியால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 5 லட்சம் பரிசு
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது இந்திய பாட்மிண்டன் சங்கம்.
இது தொடர்பாக அதன் தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சுட்டுரையில் கூறியிருப்பதாவது:
இந்தோனேசிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துகள்.
நீங்கள் எங்கள் அனைவரையும் பெருமைகொள்ள வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக், இந்திய பாட்மிண்டன் வீரர்கள் அஜய் ஜெயராம், எச்.எஸ்.பிரணாய், அஸ்வினி பொன்னப்பா உள்ளிட்டோரும் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com