அரிசி உணவு, ரொட்டி, இனிப்பு கிடையாது: பாக். வீரர் ஹசன் அலியின் டயட்!

நல்ல உடற்தகுதியுடன் இருந்தால்தான் 100 சதவிகித உழைக்கமுடியும். அந்தளவுக்கு உடற்தகுதி இல்லாவிட்டால்...
அரிசி உணவு, ரொட்டி, இனிப்பு கிடையாது: பாக். வீரர் ஹசன் அலியின் டயட்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. ஆனால் பிறகு ஆடிய இந்திய அணியோ 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்குச் சுருண்டது இந்தியா. 

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இதையடுத்து ஒரு பேட்டியில் ஹசன் அலி கூறியதாவது:

பாகிஸ்தானில் பள்ளிகளில் கிரிக்கெட்டை அந்தளவுக்கு விளையாடமுடியாது. அதனால் பள்ளியிலிருந்து வெளியேறி வெளியே கிரிக்கெட் விளையாடுவேன். 2010-ம் வருடம் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என என் பெற்றோர்கள் என்னுடைய கிரிக்கெட் உபகரணங்களை எரித்துவிட்டார்கள். நான் வழக்கறிஞர் ஆகவேண்டும் என்பது என் தாயின் விருப்பம். ஆனால் எனக்கு கிரிக்கெட்டின் மீதுதான் எப்போதும் ஆர்வம் இருந்தது  

நல்ல உடற்தகுதியுடன் இருந்தால்தான் 100 சதவிகித உழைக்கமுடியும். அந்தளவுக்கு உடற்தகுதி இல்லாவிட்டால் நினைத்ததை ஆடுகளத்தில் செய்யமுடியாது. எனவே நான் இனிப்பாக உள்ள எதையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். கடந்த சில மாதங்களாக நான் சாதமும் ரொட்டியும் சாப்பிடுவதில்லை. சுவை இல்லாத உணவுகளையே தற்போது சாப்பிட்டு வருகிறேன். கிரில்ட் உணவுகளையே இப்போது சாப்பிடுகிறேன். வீட்டுக்குச் சென்றால் என் அம்மா மற்றும் என் அண்ணியிடம் எனக்கு என்ன உணவு வழங்கவேண்டும் என்பதை முன்பே கூறிவிடுவேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com