கோலிக்குத் தனி மரியாதை தரப்படவில்லை: பிசிசிஐ

கும்ப்ளேவின் விலகலால் கோலிக்குத்தான் பிசிசிஐ அதிக முக்கியத்துவம் தருகிறது என எண்ணக்கூடாது...
கோலிக்குத் தனி மரியாதை தரப்படவில்லை: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு அனுமதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். 

கேப்டன் விராட் கோலிக்கும், எனக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே பதவியை ராஜிநாமா செய்தேன் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியதாவது: 

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய பிசிசிஐ தன்னாலான முயற்சியை மேற்கொண்டது. பிசிசிஐயின் உயர் அதிகாரிகளான அமிதாப் செளத்ரி, ராகுல் ஜோஹ்ரி ஆகியோர் கோலி, கும்ப்ளே என இருவரிடமும் பேசிப்பார்த்தார்கள். நிர்வாகக் குழுவின் தலைவரான வினோத் ராயிடம் இப்பிரச்னை குறித்து மூத்த பிசிசிஐ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அதேபோல கும்ப்ளேவும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். 

கும்ப்ளேவின் விலகலால் கோலிக்குத்தான் பிசிசிஐ அதிக முக்கியத்துவம் தருகிறது என எண்ணக்கூடாது. இவையெல்லாம் ஊகங்களே. இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் தோன்றின. அதைச் சரிசெய்ய பிசிசிஐ முயற்சி செய்தது. ஆனால் சிலசமயங்களில் நம் முயற்சிகள் கைகொடுப்பதில்லை. ஒருவருடன் நமக்கு ஒத்துப்போகாதபோது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு. 

நாங்கள் எல்லோருக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். அதேசமயம் இதுபோன்ற கருத்துவேறுபாடுகளும் தோன்றுகின்றன. எல்லோரும் மனிதர்கள்தானே!

இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் விரைவில் கிடைப்பார். இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்பு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என்று சுக்லா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com