உலக ஹாக்கி லீக்: காலிறுதியில் இந்தியா-மலேசியா இன்று மோதல்

லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் காலிறுதியில் இந்தியாவும், மலேசியாவும் மோதுகின்றன.

லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் காலிறுதியில் இந்தியாவும், மலேசியாவும் மோதுகின்றன.
இந்தத் தொடரின் குரூப் சுற்றில் 4 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி, முதல் 3 ஆட்டங்களில் முறையே ஸ்காட்லாந்து, கனடா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வென்ற நிலையில், கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டது.
இதனால் "பி' பிரிவில் 2-ஆவது இடம்பிடித்த இந்திய அணி, காலிறுதியில் மலேசியாவை எதிர்கொள்கிறது. தரவரிசையில் இந்திய அணி 6-ஆவது இடத்திலும், மலேசியா 14-ஆவது இடத்திலும் உள்ளன. இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்டாலும், மலேசிய அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் கடந்த மாதம் நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது. இந்திய அணியின் முன்களத்தைப் பொறுத்தவரையில் ஆகாஷ்தீப் சிங், தல்விந்தர் சிங், எஸ்.வி.சுநீல், மன்தீப் சிங் கூட்டணி பலம் சேர்க்கிறது. மிட்பீல்டில் சர்தார் சிங், மன்பிரீத் சிங் கூட்டணி பலம் சேர்க்கிறது. அதேநேரத்தில் பின்களம் சற்று பலவீனமாக இருக்கிறது.
ரூபிந்தர்பால் சிங் காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடாததால் பெனால்டி வாய்ப்பில் கோலடிக்க ஹர்மான்பிரீத் சிங், ஜஸ்ஜித் சிங் ஆகியோரையே நம்பியுள்ளது இந்திய அணி.
வியாழக்கிழமை நடைபெறும் மற்ற காலிறுதி ஆட்டங்களில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனா, பாகிஸ்தானையும், நெதர்லாந்து, சீனாவையும், இங்கிலாந்து, கனடாவையும் சந்திக்கின்றன.

மெத்தனப்போக்கு வேண்டாம்: ஓல்ட்மான்ஸ்
காலிறுதி ஆட்டம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஓல்ட்மான்ஸ் கூறியதாவது: இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் மிகுந்த எச்சரிக்கையோடு விளையாட வேண்டும். நாக் அவுட் சுற்றில் எந்தக் காரணம் கொண்டு மெத்தனப்போக்கோடு ஆடக்கூடாது. அப்படி ஆடினால் போட்டியிலிருந்து வெளியேற நேரிடும். மலேசிய அணி சிறந்த அணி. எந்த அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com