கும்ப்ளே கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விராட் கோலி பதில்!

கடந்த 4 வருடங்களாக ஒரு பழக்கத்தைப் பின்பற்றி வருகிறோம். ஓய்வறையில் நடந்த விஷயங்களை...
கும்ப்ளே கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விராட் கோலி பதில்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு அனுமதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். 

கேப்டன் விராட் கோலிக்கும், எனக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே பதவியை ராஜிநாமா செய்தேன் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கோலி கூறியதாவது: 

கும்ப்ளே அவருடைய தரப்பைக் கூறியுள்ளார். வெளியேறவேண்டும் என்கிற முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவுக்கு மதிப்பளிக்கிறோம். ஒரு போட்டி முடிவடைந்தவுடன் இதுபோல நடந்துள்ளது. கடந்த 4 வருடங்களாக ஒரு பழக்கத்தைப் பின்பற்றி வருகிறோம். ஓய்வறையில் நடந்த விஷயங்களை ஒருபோதும் வெளியில் சொல்லக்கூடாது என்பதுதான் அது. இதுவே எங்களுக்கு முக்கியம். இதை நாங்கள் எப்போதும் கடைப்பிடிப்போம்.

என்னுடன் கருத்துவேறுபாடுகள் உள்ளதாக கும்ப்ளே கூறியுள்ளார். அது அவருடைய கருத்து. அதை நான் மதிக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக கும்ப்ளே மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன். இத்தனை வருடங்களாக நாட்டுக்காக விளையாடி நிறைய சாதித்துள்ளார். அந்த அம்சத்தைப் பொறுத்தவரை யாரும் அவருக்குரிய மரியாதையை அளிக்காமல் இருக்கமுடியாது. அவரை முழுமையாக மதிக்கிறோம். ஓய்வறையில் நடைபெற்ற எதையும் பொதுவெளியில் வைக்கமாட்டேன். அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அதை மதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது. பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் குற்றச்சாட்டுகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் இந்திய கேப்டன் கோலி, இந்தத் தொடரை வென்று தன் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com