சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்க விளையாட்டுப் பள்ளிகள் ஏற்படுத்தப்படுமா?

சர்வதேச விளையாட்டரங்கில் இந்தியாவின் புகழை நிலைநாட்ட சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்க விளையாட்டுப் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்க விளையாட்டுப் பள்ளிகள் ஏற்படுத்தப்படுமா?

சர்வதேச விளையாட்டரங்கில் இந்தியாவின் புகழை நிலைநாட்ட சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்க விளையாட்டுப் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் கி.மு. 776}இல் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி, 1896}ஆம் ஆண்டு முதல் நவீன ஒலிம்பிக் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி, சுமார் 30 நாள்களுக்கும் மேலாக நடத்தப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்து, பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பெறுமா என்ற ஏக்கத்துடன் 120 கோடி இந்தியர்களும் காத்திருக்கும் நிலை தற்போது வரை தொடர்கிறது. உலக வரை படத்தில் ஒளிந்திருக்கும் குட்டித் தீவுகள் எல்லாம் பதக்கங்களை குவிக்கும்போது, உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடான இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கிடைக்குமானால், அதை ஒட்டுமொத்த தேசமும் ஆச்சர்யத்துடன் கொண்டாடும் சூழல்தான் இன்றும் நிலவுகிறது.
இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை ஒதுக்குகின்றன. ஆனால் இந்திய விளையாட்டுத் துறையில் ஒருசில தனிநபர்களின் சாதனைகளை தவிர்த்துப் பார்த்தால், வேறு எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. ஆனால் 1980}க்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியால் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியவில்லை.
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஏராளமான விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் விளையாட்டு விடுதிகளைச் சேர்ந்தவர்கள் ஓரளவு சாதித்து வருகிறார்கள். ஆனால் மாநில அரசின் விளையாட்டு விடுதிகளில் இருந்து பெரிய அளவில் யாரும் சாதிக்கவில்லை. காரணம் அங்கே தரமான உணவு வழங்கப்படுவதில்லை. சில விடுதிகளில் மைதானமே இல்லை. இதன் காரணமாக விளையாட்டு விடுதியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் தகுதியே இல்லாத வீரர்கள்கூட விளையாட்டு விடுதியில் சேர்க்கப்படும் சூழல் இருக்கிறது.
இன்றைக்கு பெரும்பாலானவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவதற்காகவே விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள், தங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியான
பிறகு விளையாட்டை தொடர்வதில்லை. மேலும் சிலர் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேருகின்றனர்.
பொறியியல் கல்லூரிகளில் சேருபவர்களில் சிலர் விளையாட்டில் ஜொலித்த அளவுக்கு படிப்பில் சாதிக்க முடியாததால் படிப்பை பாதியிலேயே கைவிடுகிறார்கள். விளையாட்டு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் கல்வி, விளையாட்டு என இரண்டிலும் சாதிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் எதிர்பார்ப்பதால், மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் விளையாட்டு, படிப்பு என இரண்டையும் கோட்டைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை தீர்த்தாலொழிய விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்க முடியாது.
விளையாட்டுப் பள்ளிகள்: விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை பட்டை தீட்டும் வகையில், அவர்களுக்கென்று தனி பாடத்திட்டங்களை உருவாக்கி விளையாட்டுப் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விளையாட்டுப் பள்ளிகளில் வார இறுதி நாட்களிலோ அல்லது நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமோ பாட வேளை இருக்க வேண்டும். மற்ற நேரங்களில் வீரர்கள் முழுவதுமாக விளையாட்டில்தான் கவனம் செலுத்த வேண்டும்.
ஏராளமான விளையாட்டு விடுதிகளை நடத்துவதைவிட, சர்வதேச தரத்திலான விளையாட்டுப் பள்ளிகளை உருவாக்கினால் மட்டுமே திறமையான வீரர்களை உருவாக்க முடியும். சர்வதேச தரம் என்றால், ஒரே இடத்தில் வீரர்கள் தங்குவதற்கான அறைகள், மைதானம், பயிற்சிக்கான உபகரணங்கள், பயிற்சியாளர், முடநீக்கியல் நிபுணர்கள், மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர் (நியூட்ரிசியன்), உணவு கட்டுப்பாட்டாளர் (டயட்டீசியன்), ஆடியோ மற்றும் விடியோ ஆய்வுக்கூடம், ஜிம், பயோ ஆய்வுக்கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்துகிறபோது, இந்திய வீரர்கள் சர்வதேச அளவில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதுகுறித்து தமிழக பூப்பந்தாட்ட பயிற்சியாளரான விஜய் கூறுகையில், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். சீனா போன்ற நாடுகள், விளையாட்டுக்கென பிரத்யேகமாக விளையாட்டுப் பள்ளிகளை உருவாக்கியுள்ளன. ஆனால் நம் நாட்டில் விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, இத்தனை கோடி ஒதுக்கியிருக்கிறோம் எனக் கூறி விளம்பரம் தேடிக்கொள்வதையே மத்திய மாநில அரசுகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
தமிழகத்தில் போக்குவரத்து துறை, மின்வாரியத் துறை ஆகியவற்றில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அங்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் பணி நியமனம் நடைபெறவில்லை. காவல் துறையில் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்படுகிறது.
ரயில்வே, ஓ.என்.ஜி.சி., இந்திய உணவுக் கழகம், வங்கிகள் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே வேலை வாய்ப்பு அளித்து வருகின்றன. அந்த நிறுவனங்களும் குறைந்த அளவிலேயே வேலை வாய்ப்பை வழங்குகின்றன. குறிப்பாக வங்கிகளில் 20 இடங்கள் விளையாட்டிற்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது 2 அல்லது 3 என பெயரளவில் மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றார்.
(இன்று சர்வதேச ஒ−ம்பிக் தினம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com